Press "Enter" to skip to content

மதுரை மார்க்கெட்டில் ‘மலர்கள் அணிவகுப்பு’ காதலர் தினத்தை கொண்டாட கலர்புல் ரோஜாக்கள் விற்பனை: 5 மடங்கு விலை அதிகரிப்பு

மதுரை: காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரையில் வண்ண ரோஜாக்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன. பிப்.14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் முதல் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளில் விதவிதமாக இளம்பெண்கள், வாலிபர்கள் கூட்டம் கூட்டமாக ரோஜாக்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து பூ வியாபாரி வினோத் கூறும்போது, ‘‘மதுரைக்கு பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவில் ரோஸ் வருகிறது. அதாவது தாஜ்மகால் ரோஸ், விண்மீன் ரோஸ், ஊட்டி ரோஸ், தர்புரா ரோஸ் என நான்கைந்து வகை ரோஜாக்கள் மதுரைக்கு தினமும் வருகிறது. இன்னும் 3  தினங்களில் காதலர் தினம் வருவதை முன்னிட்டு, இப்போதிருந்தே கடைகளில் பூக்கள் வாங்க காதலர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் பெங்களூருவில் இருந்து வரும் தாஜ்மகால் ரோஜாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மதுரைக்கு பெங்களூரில் இருந்து 2பேருந்துகள், 2 பார வண்டி (லாரி)களில் ரோஜாக்கள் விற்பனைக்கு வருகின்றன. இதேபோல் ஓசூரில் இருந்தும் ரோஜாக்கள் விற்பனைக்கு வருகிறது. தாஜ்மகால் ரோஸ் ஒரு கட்டில் 15ல் இருந்து 20 ரோஜாக்கள் இருக்கும். இந்த கட்டின் விலை கடந்த வாரம் ரூ.100ல் இருந்து ரூ.150 வரையாக இருந்தது. தற்போது காதலர்கள் தினம் மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, ஒரு கட்டின் விலை ரூ.250 முதல் ரூ.300 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது. அதாவது 2 மடங்கு விலை அதிகமாக விற்பனையாகிறது. தவிர இதழ் மாலை, ஊட்டி ரோஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதுபோல ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்று வந்த ஊட்டி ரோஸ், தற்போது ரூ.250 ஆக அதிகரித்துள்ளது. காதலர் தினம் நெருக்கத்தில் விலை மேலும், அதாவது 5 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது’’என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »