Press "Enter" to skip to content

திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி: 2022க்குள் அனைவருக்கும் வீடு…சென்னை டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை இடையே பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவையையும் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: வரும் 2022ம் ஆண்டுக்குள்  அனைத்து ஏழை மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி பேசினார். முன்னதாக சென்னை  டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை  இடையே பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவையையும்  தொடங்கி வைத்தார். திருப்பூர் பெருமாநல்லூரில் நேற்று தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மத்திய அரசின் நிதியிலிருந்து தொடங்கப்படும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஆளுநர்   பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், காணொளி கான்பரன்சிங் முறையில் சென்னை கே.கே. நகரில் 470  படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சென்னை டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை வரையிலான பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவையை கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

திருச்சி விமானநிலைய விரிவாக்கப்பணிகள், அதிநவீன வசதிகளுடன் சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணி, சென்னை முதல் மணலி வரை ஆயில் செல்லும் பைப்லைன் பணிகள், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் 7.46  ஏக்கர் நிலப்பரப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், கரூர்,  ஈரோடு, நாமக்கல் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. பூத் குழு நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக் கூட்டம் பெருமாநல்லூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை வரவேற்றார்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இன்று தமிழகத்தில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் தற்போது 500 பயணிகள் மட்டுமே வந்து செல்ல முடியும். இன்று  அடிக்கல் நாட்டியுள்ள ஒருங்கிணைந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தால் 3 ஆயிரம் பேர் பயண வசதி பெற முடியும். திருப்பூர், சென்னையிலும் இ.எஸ்.ஐ  மருத்துவமனை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த  திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். தற்போது செயல்படும் மத்திய அரசின் அணுகுமுறை வித்தியாசமானது. எந்தெந்த முறைகளில் தேவைகளை  பூர்த்தி செய்ய முடியுமோ அவற்றை செய்து  வருகிறது. நாட்டில் 2 பாதுகாப்பு தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. அப்படி அமையும்போது, ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற ராணுவ வீரர்களின் கோரிக்கையினை இந்த அரசு நிறைவேற்றியது. பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டம் நாடு முழுவதும் துவங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில்  இன்று இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 1.30 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2022க்குள் அனைத்து ஏழை மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். நாட்டில் ஏராளமான நல்ல திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  மக்கள் வரி செலுத்துவதால் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில், ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இது  நடுத்தர மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. பொதுவாக நடுத்தர வர்க்கத்தை பற்றி கவலைபடாத கட்சி காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் தன்னை மிகப்பெரிய அறிவாளி என தன்னை  நினைத்து கொள்பவர், வாக்கு மறு எண்ணிக்கை அமைச்சரான அவர், விலைவாசி உயர்வை பற்றி ஏன் கவலைபட வேண்டும் என பேசுகிறார்.

 மக்கள் மீது அக்கறை இல்லாமல் பேசியதால் தான் ஏற்கனவே மக்கள் உங்களை தோற்கடித்தார்கள். மக்கள் மீண்டும் உங்களை தோற்கடிப்பார்கள். இந்த அரசின் செயல்பாடுகள் மீது எதிர்கட்சிகளுக்கு இருந்த வருத்தம்  விரக்தியாக மாறி, தற்போது வசைபாடும் நிலைக்கு வந்துள்ளது. விவசாயம், சிறு, குறு தொழில்கள் என எதை பேசினாலும் மோடி என்று குறிப்பிடாமல் அவர்களால் இருக்க முடியாது. எதிர்கட்சியினர் வினோதமானவர்கள். மோடி  அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது என சொல்லும் அவர்கள், மோடியை தோற்கடிக்க எதற்காக மெகா கூட்டணியை தேடிச்செல்கின்றனர். மக்கள் இவர்களின் கலப்படமான கூட்டணியை ஏற்கவில்லை. எதிர்கட்சிகளின்  திட்டம், நாட்டை பதற்றத்தில் வைத்திருப்பதே. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயி நல நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும். விவசாயிகள் ஏழ்மையில் இருந்து வெளி வருவதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை.

ஏழ்மையில் இருந்தால்தான் அவர்களை அவர்கள் வழியில் வழிநடத்த முடியும் என நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை.ஐக்கிய முற்போற்கு கூட்டணி அரசு  விவசாயிகள் கடனை முறையாக திட்டமிடாமல், பத்து ஆண்டுக்கு ஒருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்வதை பற்றி பேசுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. இதனால் 50 ஆயிரம் கோடி  செலவாகிறது. ஆனால், தற்போதைய அரசு பிரதம மந்திரி விவசாயி திட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு நிதியளிக்கிறது. இதனால் 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு கிடைக்கும். இதன்மூலம் இந்த  அரசு விவசாயிகளுக்கானது என தெரிய வரும்.மீனவ ஆண்களுக்கும், மீனவ பெண்களுக்கும் என தனி இலாகா கொண்டு வரப்பட இருக்கிறது. இதன்மூலம் அரசு அவர்கள் வீட்டு வாசலுக்கு வரும். எதிர்கட்சியினர் இத்தனை  ஆண்டு காலம் ஏன் இதை பற்றி சிந்திக்கவில்லை.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோளாகும். அதனால்தான் ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். பொதுப்பிரிவில் இருக்கும் ஏழை மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு  வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற்படுத்த மக்களுக்கு இடஒதுக்கீட்டில் எள்முனை அளவு கூட பாதிப்பு ஏற்படாது. சமூக நீதி என்பது கணக்கியல் அல்ல. நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. சமூக நீதிக்கு எதிராக இந்த அரசு எதுவும்  செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.பொதுக்கூட்டத்தில், மத்திய நிதி இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய  செயலாளர் எச்.ராஜா, மாநில செயலாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் சொன்ன திருக்குறள்: பிரதமர் மோடி நேற்று திருப்பூர் கூட்டத்தின் முடிவில் ‘‘வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு’’ என்று திருவள்ளுவர் சொல்லி இருப்பது நீரின் அளவை பொறுத்து  மலரின் உயரம் இருப்பதுபோல, மனிதர்களின் எண்ணத்துக்கு ஏற்ப வாழ்க்கையில் உயர்வு இருக்கும் என வள்ளுவர் சொல்லி இருக்கிறார். ஆகவே, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, வயதானவர்களுக்கு நல்ல மருத்துவம்,  இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம், அதேபோல் விவசாயிகளுக்கு நல்ல நீர்பாசனம் என அனைத்து மக்களும் இணைந்து உயரத்தை எட்டுவோம்’’ என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

தமிழில் பேச்சை ஆரம்பித்த மோடி: பொதுக்கூட்ட மேடைக்கு 3.35 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவருக்கு  பின்னலாடை துறையினர் சார்பில் பின்னலாடை அடங்கிய பரிசும், விவசாயிகள் சார்பில் வெள்ளியில் செய்யப்பட்ட தேங்காயும் பரிசாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழில் பேச்சை ஆரம்பித்த மோடி, தமிழ்சகோதர,  சகோதரிகளே வணக்கம் என தொடங்கி பேச ஆரம்பித்தார்.

பிரதமருக்கு கோவையில் வரவேற்பு: திருப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக விஜயவாடாவில் இருந்து நேற்று மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு 2.35 மணியளவில் கோவை  விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜி.பி. ராஜேந்திரன்  மற்றும் பாஜ. முக்கிய பிரமுகர்கள் பிரதமருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், மோடி அங்கிருந்து  2:55 மணியளவில் உலங்கூர்தி மூலம் புறப்பட்டு திருப்பூர் சென்றார்.

வாகனத்தில் அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்:  திருப்பூர் பாஜ பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பங்கேற்பார்கள் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில், கூட்டம் சேர்ப்பதற்காக, தனியார் பள்ளி  வாகனங்கள் மற்றும் பனியன் நிறுவன வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வந்திருந்தனர். இதில் ஏராளமானோர் வடமாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் ஆவர். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகளும் அழைத்து  வரப்பட்டிருந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.