Press "Enter" to skip to content

தீவிரவாதமும் பசுவதையும் ஒன்றா?- ம.பி. அரசுக்கு எதிராக போர்க்கொடி

image

மத்திய பிரதேசத்தில் பசுவதை தொடர்பாக 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதமும் பசுவதையும் ஒன்றா என்று அந்த மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக சிறுபான்மையினர், கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

கடந்த நவம்பரில் நடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றியது. அதன்பின் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் கடந்த டிசம்பர் 17-ம் தேதி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது பசுவதை தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2007 முதல் 2016 வரை 22 பேர் மீது அந்த சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி பசுவை வெட்டிக் கொன்றதாக 3 பேர் மீதும், கடந்த 8-ம் தேதி பசுக்களை கடத்தியதாக 2 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியபோது, மத்திய பிரதேச அரசு செய்தது தவறு. அந்த தவறை திருத்தும்படி முதல்வர் கமல்நாத்தை கட்சி தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கூறியபோது, “இந்த நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

போபால் மத்திய தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத் கூறியபோது, “முதல்வர் கமல்நாத் அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியபோது, “தீவிரவாதிகள் மீது மட்டுமே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீவிரவாதமும் பசுவதையும் ஒன்றா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சத்யபால் சிங் கூறியபோது, “பசுவதை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தலையொட்டி மிதவாத இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »