Go to ...
RSS Feed

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு


16 வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்களை நியமித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வழி செய்யும் லோக் பால், லோக் ஆயுத்தா சட்டம் 1968-ம் ஆண்டு  கொண்டுவரப்பட்டு 1969-ம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

45 வருட கடும் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2013-ம் ஆண்டு லோக் பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, ஓராண்டில் அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் 20 மாநிலங்கள் மட்டும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவாமல் இருந்தன.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதாகவும், இந்த மாநில அரசுகளுக்கு லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்தியாய வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2018 ஏப்ரல் 12-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்கக் காத்திருக்கிறோம். மேலும் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை, ஏன் மத்திய அரசுக்காக காத்திருக்கிறீர்கள், உங்களால் சுயமாக முடிவு எடுக்க முடியாதா ? என கேள்வி எழுப்பி லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிட்டனர். இதற்காக காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த 2018 ஜூலை 9-ம் தேதி தமிழக சட்டபேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கான பிரமாணப் பத்திரத்தை 2018 ஜூலை 10-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததோடு, 2 மாத கால அவகாசமும் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் 2 மாதத்தில் எந்தத் தாமதமும் இல்லாமல் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

லோக் ஆயுக்தா அமைப்பதற்கு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கால அவகாசம் வழங்கியும், அதை தமிழக அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை. இதுவரை தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? தமிழக அரசு இதைக் கால தாமதம் செய்ய விரும்புகிறதா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்கான பணிகள் எப்படி நடக்கிறது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 24- ல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 மாத காலம் கூடுதல் அவகாசம் வேண்டும். 2019 பிப்ரவரி முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா அமைப்போம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள், தமிழகத்துக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கினர்.

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் தலைமைச் செயலாளர்  உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினரைத் தேடும் குழுவானது தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே 12 வாரம் அவகாசம் தேவை என அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த மனுவில், குறிப்பாக 8 வாரத்தில் லோக் ஆயுக்தா அமைப்பில் உள்ள உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும், அதன் பின்னர் 4 வாரத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கி செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு 16 வார காலம் அவகாசம் வழங்கியதோடு, இந்தக் குறிப்பிட்ட காலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

Source: The Hindu