Press "Enter" to skip to content

மனு கொடுக்க வர்றாங்களா இல்லை தீ குளிக்க வர்றாங்களா.. டென்ஷனில் மதுரை காவல் துறை

ALLOW NOTIFICATIONS
 

lekhaka-S muthukrishnan
|

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவோரில் சிலர் திடீரென தற்கொலைக்கு முயற்சிப்பதால் காவல் துறையினர் எந்த நேரமும் பதட்டத்திலேயே இருக்கும்படி உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடைய பிரதான குறைகளை தீர்க்கும் நீதிமன்றமாக செயல்பட்டு வருவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான். அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் அவர்களின் தலைமையில் நடைபெறுவது வழக்கமான ஒன்று.

சமீபகாலமாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கூலித்தொழில் செய்பவர்கள், விவசாய பெருமக்கள் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பிரச்சினைகள் பலவிதம்

இட மோசடி, நில மோசடி, வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், குடும்ப பிரச்சனை, விதவை பணம் பெறுவது, முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பாலியல் தொந்தரவு என பல்வேறு தரப்பு குறைகளோடு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் கூடி வருகின்றனர்.

திடீர் தீக்குளிப்புகள்

சிலர் தங்களது குறைகளை அந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படாமல் மனவேதனை அடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தன் குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க இதையே வழக்கமாக வைத்து மாவட்ட ஆட்சியரின் கவனம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் குறை தீர் கூட்டம் நடைபெற்று இருக்கும் போது மண்ணெண்ணெய் கேன்களை கொண்டு வந்து தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறதாம்.

தூண்டி விடுகிறார்களாம்

இதில் சிலர் அப்பாவி மக்களை தூண்டி விடுகிறார்களாம். நான் சொல்றதை கேளு இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கிக்க நேரா மாவட்ட ஆட்சியர் ஆபீஸ் போ தலையில மண்ணெண்ணெய ஊத்தி தீக்குளிப்பது பல நடி. கண்டிப்பா கலெக்டரும் உன் பிரச்சினைய சரி பண்ணி குடுத்துருவாரு என்று பாமர மக்களுக்கு அறிவுரை செய்தும் தூண்டி விடுவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தீக்குளிக்க முயற்சிப்பவர்கள் குறித்து போலீஸாரின் பார்வை மாறும் அபாயமும்ம் உள்ளது.

தயார் நிலையில் காவல் துறை டீம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்கள் தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலை தொடர கூடாது என்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட காவல்துறையினர் எந்த நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாராவது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தால் டக்கென ஓடிப் போய் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி தலையில் தண்ணீரை ஊற்றி மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர்.

தீக்குளிப்பு முயற்சிகள்

வீட்டை விட்டு எங்களை உறவினர்கள் துரத்தி விட்டனர் என்று பஞ்சவர்ணம் என்ற பெண் தனது 12 வயது பெண் குழந்தை மற்றும் 9 வயது ஆண் குழந்தையோடு தீக்குளிக்க முயற்சி செய்தார். கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமதாஸ் என்பவர் தனது விளை நிலங்களை பட்டா போட்டு போலியான ஆவணங்கள் தயாரித்து விட்டதாக புகார் தெரிவித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அதேபோல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்து கொடுக்க கோரி வழக்கறிஞர் சாமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் எப்பொழுதுமே பதற்றமாகவே இருந்து வருகின்றனர். கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.. என்ன செய்வது, மக்கள் பிரச்சினைகளை விரும்புவதில்லை என்ற போதிலும் பிரச்சினைகள் மக்களை விட மாட்டேங்குதே.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.