Press "Enter" to skip to content

21 தொகுதி இடைத்தேர்தல்; நிர்பந்தத்துக்கு பணிந்து ஒத்தி வைக்கக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திட முனையும் மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து தொடங்கி வைத்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும். தமிழகத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது.

ஏற்கெனவே நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோரும் இரண்டு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு, தமிழக அரசு கோரிய வறட்சி, வெள்ளம், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப்பு, காவிரியில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு ஒப்புதல் போன்ற பல செயல்களைக் குறிப்பிட முடியும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்குக் கூட வர மறுத்தவர்தான் பிரதமர் நரேந்திர மோடி என்பது மறக்க முடியாததாகும். 2018 -2019 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

 குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான பொருட்கள், மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி 2017-2018-ம் ஆண்டில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூபாய் 5454 கோடி, பொருட்கள் மற்றும் சேவை வரிகள் தமிழகத்திற்கான பங்கில் ரூ.455.16 கோடி மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.560.15 கோடி, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.3852.17 கோடி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பாக்கித் தொகை ரூ.985.08 கோடி ஆகிய தொகைகளை மத்திய அரசு வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து மாநிலத்தின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. இத்தகைய வரலாற்று அநீதிகளை மத்திய மோடி அரசு இழைத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, அவரை அழைத்து தமிழகத்தில் விழா எடுப்பதானது எட்டி உதைக்கும் காலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்குச் சமமாகும்.

தங்களது ஊழல் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் அவற்றுக்கு துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டுமன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது.

நாடு முழுவதும் மக்கள் விரோதக் கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் என்றாலே அதிமுக பயந்து நடுங்கி வருகிறது. தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்பதாலும், தொடர்ந்து பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப்போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும்.

 இதற்காகவே, மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும். தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்துவது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும்.

இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டப்பேரவை பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வருகின்றனர்.

ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும். மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமன்றி தேர்தல் ஆணையத்தின் மீதான வரலாற்றுக்கரும்புள்ளியாக பதிவாகும்.

ஆளும் கட்சிகளது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிப்படி தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அரசியல் காரணங்களுக்காக இதை நிறைவேற்றத் தவறுவது இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அரசியல் நெறிமுறைகளை தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வரும் மோடி அரசு, அரசியல் கூட்டணி லாபத்திற்காக இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க முயலுமானால் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.