Press "Enter" to skip to content

ட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு 15 நாட்கள் கெடு: உள்ளூர் அதிகாரிகளை சந்திக்க மறுப்பு

சமூக வலைதளங்களில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விவகாரத்தில் 15 நாட்களுக்குள் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்லது மூத்த அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

சமூகவலைதளமான ட்விட்டர் மீது நாடுகள் எடுக்கப்படும் விசாரணை நடவடிக்கை தொடர்கதையாக உள்ளது. அமெரிக்க காங்கிரஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக இந்தியா நாடாளுமன்றம் ட்விட்டர் மீது விசாரணை நடத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், இதுபற்றிய விசாரணைக்காக  நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி சம்மன் அனுப்பியது.

அந்த சம்மன் கடிதத்தில் பிப்ரவரி 7-ம் தேதி அதில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், அனைவரும் ஆஜராக வேண்டும் என்பதால் விசாரணை தேதி பிப்ரவரி 11-க்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து. ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான சட்ட வழக்கறிஞர் விஜய் காடி அனுப்பியுள்ள கடிதத்தில், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜராக மறுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு, மிகக் குறுகிய காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதால் வருவது கடினம். பயண காலமே பத்து நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவினரை சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக இன்று வருகை தந்தனர். நாடாளுமன்ற துணை கட்டடத்தில் உள்ள நிலைக்குழு அலுவலகத்தில் சந்திக்க சென்றனர். ஆனால் பாஜகவைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் தலைமையிலான  தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அவர்களை சந்திக்க மறுத்து விட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்லது மூத்த அதிகாரிகள் இந்தியா வந்து நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என புதிய சம்மன் அனுப்பட்டுள்ளது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »