Press "Enter" to skip to content

ஆம்பூரில் ஒற்றை யானை குடிநீர் தேடி அலைவதை தடுக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டன

ஆம்பூர்:  ஒற்றை யானை குடிநீர் தேடி அலைவதை தடுக்க ஆம்பூரில் வனத்துறையினர் வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை ஒட்டியும், ஊட்டல் தேவஸ்தானம் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் துவக்கி உள்ளனர். ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதா உத்தரவின்பேரில் வனவர் கருணாமூர்த்தி தலைமையில் வனக்காப்பாளர் சுரேஷ், வனக்காவலர் லட்சுமணன் மற்றும் தன்னார்வலர்கள் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆம்பூர் வனச்சரகத்தில் சுட்டக்குண்டா முதல் சாரங்கல் வரை பரந்து விரிந்து உள்ளது துருகம் வனப்பகுதி. இது ஆந்திராவின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி அமைந்து உள்ள காடுகள் ஆகும். கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் இப்போது பெருங்கானாறு நீர்நிலை குறைந்து காணப்படுகிறது. பெருங்கானாற்றில் தண்ணீர் குறைந்துவிட்டதால் பெருங்கானாற்றின் கரையில் பெரிய துருகம், தேன்கல் கானாறு, சாரங்கல் ஊட்டல் பகுதிகளில் முகாமிட்டு இருந்த யானைகள், மான்கள் தண்ணீர் தேடி காடுகளை விட்டு வெளியே வர துவங்கி உள்ளன.

மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை ஒட்டி உள்ள ஜம்பூட்டல் துருகம்  காப்புக்காடுகளில் வற்றாத நீர்நிலையாய் உள்ளது. அதனால் அண்மை காலமாக வனவிலங்குகள், பறவைகள் இங்கு அதிக அளவில் வர துவங்கி உள்ளன. கடந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் பெருங்கானாற்று பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை ஆண் யானை (டஸ்கர் யானை)  ஜம்பூட்டல் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. ஜம்பூட்டல் பகுதியை பார்க்க சென்றவர்கள்  கடந்த சில நாட்களாக ‘டஸ்கர் யானை’ அங்கேயே சுற்றி திரிந்து வருவதை கூறினர்.

மேலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஒற்றை யானையோ, புள்ளி மான்களோ தண்ணீர் தேடி வராவண்ணம், வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஜம்பூட்டல் வனப்பகுதியில் ‘டஸ்கர் யானை’ சுற்றி வருவதால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு ‘டஸ்கர் யானை’ யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »