Press "Enter" to skip to content

நிலுவை தொகையை வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு : கரும்பு விவசாயிகள் எச்சரிக்கை

கடலூர்: கரும்பு விவசாயிகளுக்கு பல தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் நிலுவைத்தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் விவசாயிகளுக்கு முழுமையாக நிலுவைத்தொகையை இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான கரும்பு அறுவை தொகை பாக்கியை,  கடந்த 13 மாதங்களாக விவசாயிகளுக்கு தரவில்லை.   மேலும் வட்டி தொகையையும் ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. தீபாவளிக்கு முன்னர் சென்னை ஆரூரான் சுகர்ஸ் நிர்வாக அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தீபாவளி பண்டிகைக்குள் முழுமையாக நிலுவைத்தொகை வழங்கிவிடுவதாக ஆலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

ஆனால் உறுதியளித்தபடி தற்போது வரை நிலுவைத்தொகையை வழங்காமல் அம்பிகா சர்க்கரை ஆலை காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள விவசாயிகள் பல முறை போராட்டங்கள் நடத்தியும்,  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எவ்வித பயனும் இல்லாததால் ஆலை நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திக்க வேண்டும் என்று கூறி 50-க்கும் மேற்பட்டோர்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

பின்னர் துணை பொது மேலாளர் பேச்சுவார்த்தையில் நடத்தி சமரசத்தில் ஈடுப்பட்டார். ஆனால் கரும்பு விவசாயிகள் வருகின்ற 19-ம் தேதி சென்னையில் உள்ள ஆலை நிர்வாகத்தினை  முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவைத்தொகை பாக்கியை வழங்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.