மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு: சிநேகாவைப் பாராட்டிய கமல்ஹாசன்
Feb 14, 2019
சாதி, மதமில்லை எனச் சான்றிதழ் பெற்ற சிநேகாவைப் பாராட்டி கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா (34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.
சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற சிநேகா, சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழைப் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார்.
இந்தத் தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர், அவரைத் தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் ட்விட்டரில் சிநேகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் மகள் சிநேகாவுக்கு என மனமார்ந்த வாழ்த்துகள். மதம் மாறுவதைவிட, மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா… புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம்பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே” என ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.
Source: The Hindu