Press "Enter" to skip to content

சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக செலவழிக்கும் பாஜக செம்மொழி தமிழைப் புறக்கணிப்பது ஏன்? கி.வீரமணி கேள்வி

சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக செலவழிக்கும் பாஜக செம்மொழி தமிழைப் புறக்கணிப்பது ஏன் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்படும் தொல்லியல் ஆய்வுகள்:

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு 12.2.2019 அன்று ஒரு வழக்கில், தமிழர் நாகரிகம், பண்பாடு அறிவது முக்கியம்;  இதில் மத்திய அரசு காலந்தாழ்த்துவது ஏற்புடையதல்ல. கீழடி ஆய்விலும் அதிகாரி இடம் மாற்றம் எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடத்தப்பட்டதே அதன் முடிவு என்னவாயிற்று? அந்த அகழாய்வு அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை?

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளையில் அகழாய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதில் அளிக்கவேண்டும்; தவறும்  பட்சத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட கீழடி ஆய்வுகள் – திராவிட நாகரிகமான மொகஞ்சதாரோ, ஹரப்பாவுக்கும் கூட முந்தையதாக இருக்கக்கூடியதாகவும், மதுரை மாவட்டத்திலும் கூட பரந்துபட்ட பழம்பெரும் சின்னங்கள் ஆய்வில் கிடைக்கவிருக்கிறது என்பது போன்ற ஆய்வுத் தகவல்கள் முன்பு வந்த காரணத்தால், மத்தியில் ஆளும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியான மோடி ஆட்சி இதில் போதிய அக்கறை காட்டாதது மட்டுமல்ல; மேற்கொண்டு ஆய்வு நடத்தாமல் மூடி, ஒரு இறுதி நிலைக்குக் கொண்டு வரத் துடியாய்த் துடிக்கின்ற அதிகாரி அமர்நாத்  ராமகிருஷ்ணனை மாற்றியதோடு, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் எவ்வளவு இதற்குக் குழிவெட்ட முடியுமோ அவ்வளவும் செய்து வருகிறார்.

தாங்கள் ஆய்வைத் தொடர்வோம் என்று தமிழக அரசு கூறியது; ஆனால், நடைமுறையில் அது விரைந்து பின்பற்றியதாகவும் தெரியவில்லை.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கீழடி சென்றுகூட நேரில் பார்த்து உத்தரவிட்டனர்.

எதற்கும் மத்திய அரசு அசைந்து கொடுக்காமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. நாம் கேட்பது பிச்சையல்ல; சலுகை அல்ல; நமது உரிமையைத் தான் கேட்கிறோம். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்று இந்த கோரிக்கை.

நம் மொழி, பண்பாடு, நாகரிகத்தைப் பாதுகாத்துக் கொள்வது அடிப்படை உரிமை என்பதை இந்திய அரசியல் சட்டம் 29(1) பிரிவு நமக்கு அளித்துள்ள, எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமையாகும்.

 காளையைக் குதிரையாக்கிய பாஜக அரசு

திராவிடர் தம் பழைய மொகஞ்சதாரோ, ஹரப்பா கலாச்சார சின்னமான காளை மாட்டையே முன்பு – அமெரிக்காவில் சிலரைப் பிடித்து ஆரியர்களின் குதிரைச் சின்னமாக மாற்றிட முயற்சியைச் செய்து தோல்வி கண்டது வாஜ்பாயி தலைமையில் நடந்த ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சி என்பது பழைய வரலாறு.

செம்மொழி நிறுவனத்தை சீர்குலைப்பதா?

மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியை பெற்றார்.

என்றாலும், தொடர்ந்து மத்திய அரசுகளும், கட்சிக் கண்ணோட்டத்தோடு ஜெயலலிதா அரசும், செம்மொழி நிறுவனத்தை ஒரு செயலற்ற பொம்மைக் காட்சியாகவே ஆக்கி ஒரு கெட்ட மகிழ்ச்சியைப் பெற்று வருவது மகாவெட்கக்கேடு. பிரதமர் மோடி திடீரென தமிழின் பெருமைபற்றி ரேடியோவில் பேசுவார்; தமிழ்நாட்டுக்கு வந்து ஓட்டு வேட்டையாடும்போது தமிழில் சில வாக்கியங்கள் பேசி கைதட்டல் வாங்குவார்.

ஆனால், உண்மையில் மத்திய அரசு நமக்கு – செம்மொழி விஷயத்திலும்கூட வெறுப்புடனும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் தான் நடந்துகொள்கிறது. இது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல; பூமிப் பந்தில் எங்கும் வாழும் தமிழர்களின் தொடர் கோரிக்கைகளால், செம்மொழி நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்தது; அதனைக் கருணாநிதி கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காகப் பழி தீர்க்கும் நோக்கில், அதனை அலட்சியத்தோடு பார்ப்பது, நடத்துவது மிகமிக கண்டனத்திற்குரியதாகும்!

இதுகுறித்து ஒரு பேட்டியில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறியுள்ளது மிகவும் சிந்திக்கத்தக்கதோடு, போராடவேண்டிய தேவையையும் வலியுறுத்துவதாகவே உள்ளது! 

மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் 2004 ஆம் ஆண்டு தமிழ்மொழி இடமும் பெற்றது. அப்போதே மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இதனை நிர்வகிக்கும் என்பதால், ஒரு நிரந்தர இயக்குநரை அதிலும் தமிழ்த் தகுதியுள்ள ஒருவரை அமர்த்தாமலும்,  போதிய அக்கறை காட்டாமலும், முடங்கவே செய்யப்பட்டு வருகிறது.

ஆய்வறிஞர்கள் எங்கே?

(1) செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் முதுநிலை ஆய்வறிஞர் பேராசிரியர் இரா.கோதண்டராமன் கூறும்போது, தொடக்கம் முதல் 14 ஆண்டுகளாக தமிழுக்கே தொடர்பில்லாத ஐஐடியின் பொறியியல் பேராசிரியர்களான 6 பேர் இதுவரை பொறுப்பு இயக்குநர்களாகவே அமர்த்தப்பட்டு, அதனை வளரவிடாமல் பார்த்துக் கொண்ட நிலை.

(2) 16 ஆய்வறிஞர்கள் இருந்த இடத்தில் இப்போது ஒருவர்கூட இல்லை என்பது கொடுமை

(3) 150 நிந்தர அலுவலகர்களுடன் செயல்படவேண்டிய நிறுவனத்தில் வெறும் 40 பேர், அதுவும் தொகுப்பூதியப் பணியில் உள்ளனர்.

நிதி உதவி குறைப்பு!

(4) மத்திய நிதி ரூ.25 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டது.

(5) ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் ரூ.74.5 கோடி பெற்ற நிறுவனத்தால், இப்போது ரூ.3.5 கோடி மட்டுமே பெற முடிகிறது.

 (6) தற்போது என்ஐடி பதிவாளர் கூடுதல் பொறுப்பு பதிவாளராக 2 ஆண்டுகளாக நீடிக்கும் கொடுமை! உண்மை தமிழ் இன உணர்வாளர்களை, மொழி ஆர்வலர்களைத் திரட்டி நாம் போராடியாகவேண்டும். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலரும் இதுகுறித்து போதிய கவலை – அக்கறை செலுத்தாதது வேதனைக்குரியது.

மோடி அரசு மீண்டும் வரக்கூடாது என்பதற்கான காரணம் என்ன?

மீண்டும் மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு ஏன் வரக்கூடாது? என்பதற்கு இதனையும் ஒரு பரப்புரைக் களமாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திட வேண்டும்.

சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக பணத்தை – மக்கள் வரிப் பணத்தை செலவழிக்கும் மத்திய அரசு செம்மொழி தமிழைப் புறக்கணிப்பது – அது எம்மொழி என்பதாலா? மானமும் அறிவும் உள்ள திராவிடர்கள் – தமிழர்கள் சிந்திக்கவேண்டாமா? செயலாற்றக் களம் காண வேண்டாமா?”, என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »