Go to ...
RSS Feed

பாஜக வெற்றி பெறலாம்; 2-வது முறையாக மோடி பிரதமராக வரமாட்டார்: சரத் பவார் கணிப்பு


மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம், ஆனால், கூட்டணியின் துணையோடுதான் ஆட்சி அமைக்க முடியும். அவ்வாறு ஆட்சி அமைத்தாலும் மோடி 2-வது முறையாக பிரதமராக வர வாய்ப்பு கிடைக்காது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கணித்துள்ளார்.

மும்பையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

”வரும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய கணிப்பின்படி, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம். ஆனால், பெரும்பான்மை பெறாது. ஆட்சி அமைக்க கூட்டணி உதவியை நாடும். அவ்வாறு ஆட்சி அமைத்தாலும், மோடி 2-வது முறையாக பிரதமராக வர வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்வு செய்யும்.

நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடைய குடும்பத்தின் சார்பில் இருவர் போட்டியிடுவதால், நான் போட்டியிடுவது சரியாகாது. நான் தேர்தலில் தோற்றுவிடுவேன் என்ற பயத்தால் விலகுகிறேன் என்று தேவேந்திர பட்நாவிஸ் சொல்வது சிறுபிள்ளைத்தனம். நான் 14 முறை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இருக்கிறேன். தோல்வி அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. வாஜ்பாய், அத்வானி கூட தோற்று இருக்கிறார்களே.

காங்கிரஸ் கட்சியுடன், கூட்டணி குறித்த பேச்சு முடிந்துவிட்டது, விரைவில் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 45 இடங்களில் பாஜக வெல்லும் என்று  அமித் ஷா தவறாகச் சொல்லிவிட்டார். உண்மையில், 48 இடங்களையும் பாஜக வெல்லும் என்று கூறி இருக்க வேண்டும்.  

என்னை அரசியல் குரு என்று மோடி புகழலாம். ஆனால், அரசியல் ரீதியான முடிவுகள் என்று வரும்போது, மோடி யாருடைய அறிவுரையையும் கேட்கமாட்டார். 56 இஞ்ச் மார்பைத்தான் காட்டுவார்.

பாலகோட் விமானத் தாக்குதலை தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துபவர்கள், தேர்தலில் நியாயமாக வெல்ல முடியாது என நினைப்பவர்கள்தான் இதுபோன்ற விஷயங்களைத் துணைக்கு எடுப்பார்கள். ராணுவத்தினரின் வீரச் செயல்களை நாங்கள் போதும் அரசியலாக்கி, ஆதாயம் தேடமாட்டோம்.

பண மதிப்பிழப்பு குறித்து மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)யின் அறிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி) எச்சரித்து, எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் செயலால், இன்று லட்சக்கணக்கில் மக்கள் வேலையிழந்துள்ளனர்”.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

Source: The Hindu

Tags: