Press "Enter" to skip to content

அபிநந்தன் புகைப்படத்துடன் கூடிய 2 பாஜக விளம்பரத்தை நீக்க வேண்டும்- பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

image

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் புகைப்படத்துடன் கூடிய டெல்லி பாஜக எம்எல்ஏ-வின் 2 விளம்பரங்களை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாதுகாப்புப் படை வீரர்களையோ விளம்பரங்களில் அவர்களது புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், டெல்லியின் விஸ்வாஸ் நகர் தொகுதி பாஜக எம்எல்எ-வான ஓம் பிரகாஷ் சர்மா, கடந்த 1-ம் தேதி பேஸ்புக்கில் 2 விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.

அதில், “அபிநந்தன் நாடு திரும்பியது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி”, “பாகிஸ்தான் அடிபணிந்தது, நாட்டின் துணிச்சலான வீரர் நாடு திரும்பி உள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த 2 விளம்பரங்களுடன் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஆகியோருடன் சர்மாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து ‘சிவிஜில்’ என்ற செயலி மூலம் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், விளக்கம் அளிக்குமாறு சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பி உள்ளது. மேலும் இந்த 2 விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறு, பேஸ்புக் (இந்தியா மற்றும் தெற்கு ஆசியா) இயக்குநர் ஷிவ்நாத் துக்ராலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட வேண்டியது எங்கள் கடமை என துக்ரால் தெரிவித்தார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »