Press "Enter" to skip to content

அனில் அம்பானி, நிரவ் மோடி ரகசியமாகப் பேசினாலே மோடி காதில் விழுகிறது… விவசாயிகள் சத்தமாகக் கூறினாலும் கேட்பதில்லை: ராகுல் காந்தி சாடல்

சாமானிய மக்களின் குரல் பிரதமர் மோடிக்கு கேட்பதில்லை, அனில் அம்பானி, நிரவ் மோடி ஆகியோரின்  பேச்சும், குரலும்தான் அவருக்கு கேட்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு கேரள மாநிலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். திருச்சூர் அருகே திருப்பிரயாரில் அனைத்து இந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய மீனவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

இன்று மத்தியில் ஆளும் அரசுக்கு, சாமானியர்களின் குரல் காதில் கேட்பதில்லை. அனில் அம்பானி, நிரவ் மோடியின் குரல்தான் கேட்கிறது. பிரதமர் மோடியிடம் அவர்கள் என்ன சொன்னாலும், அதை 10 வினாடிகளில் செய்துவிடுகிறார். அவர்கள் சத்தமாக பேசவேண்டியதில்லை, ரகசியமாக கூறினாலே போதும்.

ஆனால், விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள் அரசு முன் சத்தமிடுகிறார்கள், தங்கள் குரலை கவனியுங்கள் என்று கேட்கிறார்கள்.தேசத்தில் அவர்களின் குரலைத்தான் நாம் முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டும்.

மோடியுடன் தொடர்பு வைத்துள்ள நேர்மையற்ற மனிதர்கள் குறித்துதான் அதிகம் பேசுகிறேன். இந்த தேர்தல் உண்மையில் மோடிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான மோதல்.

நேர்மையற்ற மனிதர்கள் தங்களை சந்தைப் படுத்திக்கொள்ள பிரதமர் மோடி உதவுகிறார். நான் ஒருபோதும் அனில் அம்பானியை அனில் அம்பானி அண்ணா  என்றும், நிரவ் மோடியை நிரவ் மோடி அண்ணா என்றும் அழைத்தது இல்லை.

விஜய் மல்லையா இந்த நாட்டைவிட்டு தப்பிச் செல்லும் முன், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்துவிட்டுத்தான் தப்பிச் சென்றார்.

காங்கிரஸ் கட்சி  மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றால், மீனவர்களுக்கென தனியாக அமைச்சரவை உருவாக்கப்படும். நரேந்திர மோடியைப் போல் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கமாட்டேன். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சொன்னதைச் செய்வோம். நான் சில விஷயங்களை முடிவு செய்தபின்புதான் வாக்குறுதிகளை அளிப்பேன். ஆதலால், காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்குவது உறுதி

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »