Go to ...
RSS Feed

பாலியல் சம்பவம் தொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்கு பதிய வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பெண் வழக்கறிஞர்கள் முறையீடு


பாலியல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானியிடம் பெண் வழக்கறிஞர்கள் நேற்று முறையீடு செய்தனர்.

பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர் பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு தமிழக அரசு பரிந்துரை செய்து உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானி மற்றும் நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் பெண் வழக்கறிஞர்கள் நேற்று காலை ஒரு முறையீடு செய்தனர்.

அதில், ‘‘கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்துவழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் நேரடி கண்காணி்ப்பில் விசாரணை நடத்த வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே நீதிமன்றமும் தலையிட்டால் அது சரியாக இருக்காது. எனவே இதில் பொறுத்து இருந்து பார்ப்போம்’’ என்றனர்.

இதற்கிடையே வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் நேற்று பிற்பகலில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக ஒரு முறையீடு செய்தார். அதில், ‘‘இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித்துறை உயர்மட்ட விசாரணைக்குழு அல்லது பணியில் உள்ள நீதிபதியை நியமித்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்ய உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு நீதிபதி, இதுதொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டால் விசாரிக்கப்படும் என்று கூறினார்.

Source: The Hindu

Tags: