Press "Enter" to skip to content

காங். மூத்த தலைவர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்

image

காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டாம் வடக்கன் நேற்று அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர், பின்னர் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்தார்.

டாம் வடக்கன் தனது முடிவு குறித்து கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் எதிர்வினையாற்றிய விதம் மிகவும் கவலை அளித்தது. தேச நலனுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதால் அக்கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன். 20 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தேன். ஆனால் ஒருவரை பயன்படுத்திக்கொண்ட பிறகு தூக்கி வீசும் கலாச்சாரத்தை காங்கிரஸ் பின்பற்றுகிறது. அக்கட்சியில் வாரிசு அரசியல் உச்சத்தை அடைந்துள்ளது” என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு முக்கிய உதவியாளராக இருந்தவர் டாம் வடக்கன். 1990-களின் இறுதியில் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றபோது அவர் அமைத்த முதல் ஊடகக்குழுவில் டாம் வடக்கன் இடம்பெற்றார். தேர்தல் நேரத்தில் அவர் கட்சி மாறியது காங்கிரஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கேரளாவை சேர்ந்த டாம் வடக்கன், வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் அங்கு போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »