Press "Enter" to skip to content

திருச்சியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான காசோலைகள், புரோ நோட்டுகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

திருச்சி: திருச்சியில் சுமார் 10 கோடி ரூபாய மதிப்பிலான காசோலைகள், புரோ(கடனுறுதிப் பத்திரங்கள்) நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்வதை தடுக்க, ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், திருச்சி-கரூர் சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பராயத்துறையில் வட்டாட்சியர் சுமதி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த சொகுசு தேரை (காரை) மடக்கி சோதனை செய்தபோது அதில் வந்த 3 பேரிடம் 192 காசோலைகள் மற்றும் 2 புரோ நோட்டுகள் இருந்துள்ளன. சுமார் 8 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கான 192 காசோலைகளையும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான 2 புரோ நோட்டுகளையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன், மணி, பேச்சுமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் உரிய ஆவணங்களை செலுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனக மாணிக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »