Press "Enter" to skip to content

பாஜக அழைப்பை நிராகரித்த வீரேந்திர சேவாக்: தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்தார்

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் போட்டியிடுவதற்காக பாஜகவின் அழைப்பையும், வாய்ப்பையும்  முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஏற்க மறுத்துவிட்டார்.

அதேசமயம், மற்றொரு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீரேந்திர சேவாக்கிற்கு டெல்லி மேற்குத் தொகுதியும், கவுதம் கம்பீருக்கு கிழக்குத் தொகுதியும் வழங்க பாஜக தலைமை தீவிரமாக யோசித்துள்ளது. மேற்கு டெல்லியில் பாஜக சார்பில் தற்போது பர்வேஷ் வர்மா எம்.பியாக இருந்து வருகிறார்.

 ஆனால், சேவாக்கிடம் இதுகுறித்து பாஜக சார்பில் பேசப்பட்டபோது, அவர் பாஜக சார்பில் போட்டியிட மறுத்துவிட்டால், தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் களமிறங்க விருப்பமில்லை என்று பாஜகவின் கோரிக்கையை சேவாக் நிராகரித்துவிட்டார். சேவாக்கிற்கு அரசியலிலும் விருப்பம் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், கசிந்த தகவலின்படி, ஹரியாணா மாநிலம், ரோடக் தொகுதியில் பாஜக சார்பில் சேவாக் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை சேவாக் மறுத்துவிட்டார். சேவாக் ட்விட்டரில் அப்போது கூறுகையில், “, வதந்திகளைப் போன்று  சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. கடந்த 2014-ம் ஆண்டிலும் இதேபோன்று வதந்தி பரவியது. அப்போதும் விருப்பம் இல்லை, இப்போதும் இல்லை” எனத் தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், டெல்லி பாஜக மாநிலத்தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் சேவாக்கை சம்பர்க் சமர்தன் கூட்டம் தொடர்பாக சந்தித்தனர். அப்போதும் இதுபோல் பாஜகவில் சேவாக் சேரப்போவதாக வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே டெல்லி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தற்போது பாஜக தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ராணுவ வீரர்கள் நலக் குடியிருப்புதொடர்பாக பாஜகவின் கூட்டத்தில் கம்பீர் பங்கேற்றார் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், ” நான் எந்தவிதமான கருத்தும் கூறவிரும்பவில்லை. இப்போதுவரை அது வதந்திதான்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கவுதம் கம்பீர் கிரிக்கெட்விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவித்தவுடன், அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததையடுத்து, விரைவில் பாஜகவில் சேர்வார் கம்பீர் என்று பேசப்பட்டது கவனிக்கத்தக்கது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.