Go to ...
RSS Feed

மதுரையில் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரை கடிதம்


மதுரை: மதுரை எம்.பி. தொகுதி வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள். ஏப்ரல் 8ம் தேதியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. 18ம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை, 19ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடக்கின்றன.

திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதிலும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், திருவிழா நேரத்தில் மதுரையில் மக்களவைத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோவில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் கூறியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் மதுரையில் 23 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளார்.

Source: Dinakaran

Tags: