Press "Enter" to skip to content

வேலைவாய்ப்பு குறித்த உண்மைகள் வெளிவருவதை மோடி தடுக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதை பிரதமர் மோடி தடுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நிறுவன தேசிய புள்ளியியல் ஆய்வு நிறுவனத்தின்(என்எஸ்எஸ்ஓ) புள்ளிவிவரங்கள் மற்றும் நாட்டின் ஜிடிபி குறித்த விவரங்களை மத்திய அரசு திருத்தி அமைக்கும் முயற்சியில் தலையீடு செய்கிறது என்று 108 பொருளாதார வல்லுநர்கள், சமூக அறிஞர்கள் நேற்று குற்றம்சாட்டினர் . மேலும், தன்னாட்சி நிறுவனங்களில் நிர்வாகத்தில் சுதந்திரம் தேவை என்றும் வலியுறுத்தி இருந்தனர்.

குறிப்பாக ராகேஷ் பசந்த்(ஐஐஎம்-ஏ), எமிலி பிரீசா, சதீஷ் தேஷ்பாண்டே, பாட்ரிக் பிரான்கோயிஸ், ஆர். ராம்குமார், ஹேமா சுவாமிநாதன், ரோஹித் ஆசாத் உள்ளிட்ட பொருளதார வல்லுநர்கள், சமூக அறிஞர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ”  நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களில் தன்னுடைய குற்றவியல் தோல்விகளை மக்கள் அறிந்துவிடாமல் பிரதமர் மோடி தடுக்கிறார் ” என குற்றம்சாட்டி இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், “இந்தியாவின் சர்வதேச மதிப்பையும், நம்பகத்தன்மையையும் மோடி அரசு சீர்குலைத்ததுபோல் யாரும் செய்ய முடியாது. 108 சர்வதேச பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆய்வாளர்கள் நாட்டின்  புள்ளிவிவரங்கள் திருத்தப்படுவது குறித்து கவலைப்படுகின்றனர். நீங்கள் கூட கவலைப்படுகிறீர்கள்.

பொருளாதார அறிக்கை மற்றும் புள்ளிவிவரங்களில் அடைந்த மிகப்பெரிய தோல்விகளை மறைக்க மோடி முயற்சிக்கிறார். மக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் ” எனத் தெரிவித்தார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »