Press "Enter" to skip to content

தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் : தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பரமக்குடி சாலையிலுள்ள பாலத்தில் பறக்கும்படையினர் நேற்று  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி கூடலிங்கம் (65) உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பிரிவு அருகே பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அந்த வழியே வந்த ஒரு தேரை (காரை) மடக்கி ஆய்வு செய்தபோது, உரிய ஆவணங்களின்றி, ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். திருச்செந்தூர், திசையன்விளை அருகே வாகன சோதனையின்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 5.38 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி அருகே எட்டயபுரம் மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற தேரை (காரை) நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரின் டிக்கியில் புத்தம் புதிய 90 சேலைகள் இருந்தது தெரியவந்தது. சேலைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும்படை அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து தாசில்தார் பரமசிவனிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒதியத்தூர் கேட்டில் நிலைக்குழு கண்காணிப்பு அலுவலர் குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரினை நிறுத்தி சோதனை செய்ததில், ஆவணம் இன்றி 1.79 லட்சம் கொண்டு வரப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1.79 லட்சத்தினை பறிமுதல் செய்து, கெங்கவல்லி சட்டமன்ற தேர்தல் உதவி அலுவலர் வேடியப்பனிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் மற்றும் காவல் துறையினர் நேற்றிரவு 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கும்பகோணத்தில் இருந்து குளித்தலை வழியாக வந்த தனியார் பால்வண்டியை பிடித்து சோதனை செய்தனர். அப்போது பால் வண்டி டிரைவர் ஈரோடு தூரம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால்  அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.  இது கரூர் மாவட்டத்தில் முதன் முதலில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்ப பட்ட தொகையாகும்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »