Go to ...
RSS Feed

மகளிர் சுயஉதவி குழுக்களை கணக்கெடுக்கும் அதிமுகவினர் : பண பட்டுவாடா செய்ய திட்டமா?


கும்பகோணம் பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கணக்கெடுப்பு பணியில் அதிமுகவினர் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமா என்று தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.அதிமுக தலைமையிலான கூட்டணி இடைத்தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் பணம் எடுத்து செல்வதற்கும், பொருட்களை எடுத்து செல்வதற்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் நூதன முறையில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் வீடுகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய தயாராகி உள்ளனர்.இதற்காக கும்பகோணம் நகர பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம புறங்களில் உள்ள சுயஉதவி குழுக்களின் கணக்கெடுக்கும் பணி ரகசியமாக துவங்கியுள்ளது. தற்போது கும்பகோணத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு தலைவிகள், தங்களுக்கு வேண்டிய சுய உதவி குழுவினரின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் நூதன முறையில் தேர்தலுக்கு பணம் பட்டுவாடா நடப்பதை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளது.

Source: Dinakaran

Tags: