Press "Enter" to skip to content

7 முறை வெற்றி கண்ட காங்கிரஸ் கட்சிக்கு ‘கை’ கூடாத சேலம் மக்களவைத் தொகுதி

சேலம் மக்களவைத் தொகுதியில் 7 முறை வெற்றி கண்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பெறாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2014-ம் ஆண்டு வரை 16 மக்களவைத் தேர்தல் நடந்துள்ளது. இதில், சேலம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், அதிமுக 4 முறையும், திமுக மூன்று முறையும், தமாகா ஒரு முறையும், வாழப்பாடி ராமமூர்த்தி சுயேட்சையாக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி தொகுதிகடந்த 1952, 1957 மற்றும் 1962-ம் ஆண்டு நடந்த சேலம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்வி ராமசாமி மூன்று முறை வெற்றி பெற்றார். பின்னர், கடந்த 1984, 1989 மற்றும் 91-ம் ஆண்டு நடந்த சேலம் மக்களவைத் தேர்தலில் மூன்று முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேவி தங்கபாலு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் மக்களவைத் தோகுதியில் 7 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சேலம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர். முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கேவி தங்கபாலு மற்றும் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தயாராக இருந்தனர்.

முதல்வர் மாவட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக விளங்கும் சேலம் மக்களவைத் தொகுதியில் இம்முறை திமுக தேர்தல் களத்தில் போட்டியை சந்திக்க தயாராகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 11 தொகுதியில் சேலம் வடக்கு தொகுதி தவிர 10 தொகுதி அதிமுக வசம் உள்ளது. மேலும், கடந்த 1980-ம் ஆண்டு திமுக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பழனியப்பன் 2 லட்சத்து 33 ஆயிரத்து 971 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட உமாராணி 2 லட்சத்து 88 ஆயிரத்து 939 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

இம்முறை எப்படியும் சேலம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்து, சேலம் மக்களவைத் தொகுதியை தன் வசம் தக்க வைத்துள்ளது. இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான பலனை அதிகளவிலான தேர்தலில் தந்தாலும், இந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை தனதாக்கி கொள்ள ‘காய்’ நகர்த்தியுள்ளது.

பிரச்சினைகள் ’கை’ கொடுக்குமா?

சேலம் மாவட்டத்தில் எதிரொலிக்கும் எட்டு வழி சாலை, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் பிரச்சினை உள்ளிட்டவைகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற கோணத்தில் திமுக சேலத்தில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் எதிர்பார்ப்புடன் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இத்தொகுதி, ‘கை’ நழுவியிருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »