Press "Enter" to skip to content

தரமும், நம்பிக்கையுமே எங்கள் தாரக மந்திரம்!- வெற்றிப் பாதையை விவரிக்கும் `எமரால்டு’ சீனிவாசன்

தங்க நகை வாங்கறது அலங்காரத்துக்காக  மட்டுமல்ல, அதை தங்களோட சேமிப்பாகவும் மக்கள் கருதறாங்க. அதனால, 100 சதவீதம் தரம், ஃபினிஷிங், யாரும் செய்ய முடியாத அளவுக்கு டிசைன் அப்படிங்கறதுல 35 வருஷமா உறுதியாக இருக்கோம். இன்னைக்கு கிடைக்கற லாபம் போதுங்கற சிந்தனை இருக்கக் கூடாது. காலத்துக்கும் நீடித்து இருக்கணும். தரமில்லாத பொருளைக் கொடுத்து, அதுல லாபம் பாக்கறது  சிற்றின்பம்தான். மக்கள் நம்ம மேல வைத்திருக்கும் நம்பிக்கைதான் மிகப் பெரிய விஷயம். அதை என்னைக்கும் காப்பாத்தணும்” என்று சொல்லும் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி நிறுவன தலைவர் கே.சீனிவாசன், உலகில் உள்ள 10 முன்னணி தங்க நகை நிறுவனங்களில் ஒன்றாக எமரால்டு உருவெடுத்த கதையைத் தொடர்ந்தார்.

“1991-ல இயந்திரங்கள் வாங்கி, நகைகளை செய்யத் தொடங்கியபோது, முதல் திட்டம்  தோல்வியடைந்தது. அடுத்த என்ன செய்யலாம்னு யோசிச்சபோது, `ஹை பாலிஷிங்’ நகை செய்யலாம்னு முடிவெடுத்தேன். அதுவரைக்

கும் யாரும் அதை செய்யவில்லை. புதுசா நான் ஆரம்பிச்ச முயற்சி பெரிசா வெற்றியடைஞ்சது. கையால் தயாரான நகைகளைக் காட்டிலும், ஹைபாலிஷிங் நகைக்கு பல மடங்கு வரவேற்பு இருந்தது. 1990-ல ஒரு வீடும், ஆர்.எஸ்.புரத்துல, இப்ப கார்ப்பரேட் அலுவலகம் இருக்கற இடமும் வாங்கினேன். அங்க ஒரு நகை பட்டறை தொடங்கினேன்.

கல்யாணத்துக்கு போட்ட கண்டிஷன்!

வெளிநாட்டுக்கு என்னோட நகையை ஏற்றுமதி செஞ்சவாட்டிதான், கல்யாணம் செய்துக்கனுமுன்னு முடிவெடுத்திருந்தேன். துபாய்க்கு முதல்முறையாக ஏற்றுமதி செஞ்சேன். அதே வருஷம் திருமணம். கரூர்ல பொண்ணு பாக்கப்போகும்போதே, எனக்கு வியாபாரத்துல உதவியாக இருக்கணும், இந்தி பேசத் தெரிஞ்சிருக்கனுமுன்னு கண்டிஷன் போட்டேன். அதேபோல, மனைவி சக்தி, திருமணமானதிலிருந்தே எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. அவங்களோட உதவியும், ஊக்கமும்தான் என்னோ வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலம்

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்!

பல வெளிநாடுகளோட தொழில்நுட்பத்தை பாத்து, இந்தியாவிலும் அதை அறிமுகம் செஞ்சேன். முதல்ல காஸ்டிங் (மோல்டிங் டெக்னாலஜி) தொழில்நுட்பத்துல நகை செஞ்சேன். அடுத்து, மிக்ஸ்டு வெரைட்டி டிசைன்ல செயின், மோதிரம் எல்லாம் செஞ்சேன். ஸ்விஸ் நாட்டின்

எலெக்ட்ரோ ஃபார்மிங் தொழில்நுட்பம், துருக்கியோட ஸ்டாம்பிங் ஜுவல்லரி தொழில்நுட்பம், இத்தாலி மெஷின் மேட் நகைகள்னு நிறைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன். தொழில் பெரிசா விரிவடைஞ்சது. துடியலூர் பக்கத்துல குருடம்பாளையத்துல ஆறரை ஏக்கர் நிலம் வாங்கி, முதல்ல ஒரு ஃப்ளோர்ல தொழிற்சாலை தொடங்கினேன். ஆர்.எஸ்.புரத்துல இருந்த பட்டறையை 2000-ம் ஆண்டுல அங்க மாத்தினேன். தொடர்ந்து 4 மாடியா தொழிற்சாலை விரிவடைஞ்சது. அதேபோல, எலெக்ட்ரோ ஃபார்மிங் டிசைன்களுக்காக தனி தொழிற்சாலை ஆரம்பிச்சேன்.

 

தங்கத்துல ஆரம்பிச்ச நகை தயாரிப்பு, டைமண்ட், பிளாட்டினம்னு விரிவடைஞ்சது. இப்ப எங்களால ஆண்டுக்கு 50 டன் தங்க நகைகளை தயாரிக்கற அளவுக்கு கெபாசிட்டி இருக்குது. வருஷத்துக்கு 24 டன் அளவுக்கு தங்க நகைகளை உற்பத்தி செய்யறோம். இப்ப  வெள்ளி நகைகள், பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகிக்கிட்டிருக்கு. அடுத்த மாதத்திலிருந்து அது செயல்படும். வருஷத்துக்கு 65 முதல் 70 டன் வரை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கோம்.

துபாயில் நேரடி விற்பனை நிலையம்!

இதுக்குநடுவுல, அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர்னு நிறைய நாடுகளுக்கு நகை ஏற்றுமதி செஞ்சோம். அதேசமயம், வெளிநாட்ல நம்ம நேரடி விற்பனை மையம் தொடங்க விரும்பினேன். சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய்னு 3 இடங்கள்ல நேரடி விற்பனை நிலையம் தொடங்கினேன். சிங்கப்பூர் விற்பனை நிலையத்துல செலவு அதிகமானதோட, நிறைய ஏமாற்றம். தொடர் நஷ்டம் காரணமாக அந்தக் கிளையை மூடினேன். கோலாலம்பூர்ல  குற்றச் சம்பவங்கள் அதிகரிச்சதால, பயந்துகிட்ட தொழில் செய்ய வேண்டியிருந்தது. அதனால, அந்த கிளையையும் மூடிட்டேன். இப்ப துபாய்ல மட்டும் நேரடி விற்பனை மையம் செயல்படுது. பல்வேறு நாடுகள்ல இருந்தெல்லாம் அங்க வந்து, நகைகளை வாங்கிப் போறாங்க.

`ஜுவல் ஒன்’ ஷோரூம்கள்!

பல வருஷமா நகை உற்பத்தியில ஈடுபட்டிருந்தாலும், மொத்த வியாபாரிங்களுக்கு மட்டுமே விநியோகம் செஞ்சதால, தனிப்பட்ட பிராண்ட் இல்லாம இருந்தது. என்னடா இது, திரைக்குப் பின்னாலயே இருக்கோம். எப்ப நேரடியா மக்களை சந்திக்கிறதுனு யோசிச்சோம். 2013-ல புதுச்சேரியில `ஜுவல் ஒன் ‘ ஷோரூம் தொடங்கினோம். இதுவரைக்கும் 15 ஷோரூம் தொடங்கியாச்சு. இந்தியா முழுவதும் 200 ஷோரூமாவது தொடங்கனும்ங்கறதுதான் குறிக்கோள். ஒரு பக்கம் தொழில்ல வளர்ந்தாலும்,

இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யனும்னு தோணிச்சு. அப்போ-அம்மா பேரை இணைச்சு, `கிரிஷா’ அறக்கட்டளையைத் தொடங்கினோம். பல பள்ளிகளோட ஒப்பந்தம்போட்டு, ஏழைக் குழந்தைகளோட கல்விக்கு உதவறோம். நல்லா படிச்சா பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறோம். மருத்துவ உதவிகள் செய்யறோம். சுனாமி, கேரள வெள்ளம்னு இயற்கைப் பேரிடர்கள்போது நிறைய உதவி செஞ்சிருக்கோம்.

தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவு…

நான் ஏழ்மையான குடும்பத்துல இருந்து வந்ததால, தொழிலாளர்களோட கஷ்டம் முழுமையாகப் புரியும். அதனால, அவங்களோட அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்த செய்யறோம். ஃபேக்டரியில வேலை செய்யற எல்லோருக்கும் யூனிஃபார்ம் உண்டு. நான் போனாக்கூட யூனிஃபார்மோடத்தான் உள்ள போவேன். தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவு தயார் செஞ்சிக் கொடுக்கறோம். உணவுப் பொருட்களுக்கான செலவு மட்டும் கொடுத்தா போதும். மீதமெல்லாம் கம்பெனி செலவு. தங்குமிடம், ஜிம், விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கம்னு தொழிலாளர்களுக்குத் தேவையான எல்லா வசதியும் செய்து தர்றோம். ஏன்னா, தொழிலாளர்கள் இல்லாம நாங்க இல்ல. அவங்களை அக்கறையா பாத்துக்கிட்டாதான், நாம வளர முடியும். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு விழாவும், ஆண்டு விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடுவோம். 7,500, 8000 பேருக்கு மூணு வேளையும் விருந்து. பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் நிகழச்சிகள்னு களைகட்டும்.

தங்கத்தோட தரத்துலயும், ஃபினிஷிங்லேயும் எந்த குறையும் இருக்கக் கூடாதுங்கறதுல நான் உறுதியாக இருக்கேன். வாடிக்கையாளர்களோட முழு திருப்தியும், நம்பிக்கையும்தான் எமரால்டு நிறுவனத்தோட பலம். தரத்தை எந்த நிலையிலும் விட்டுத்தரக்கூடாதுனு என் குழந்தைகளுக்குக்கூட சொல்லிக்கொடுத்திருக்கேன்” என்றார் பெருமிதத்துடன்.

பொறுமையும், ஆரோக்கியமும்…

“இப்போதுள்ள புதிய தலைமுறை தொழில்முனைவோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்றோம். “வேகமாக முன்னேறனும், சீக்கிரமே பணக்காரங்களாயிடனும்னு நினைக்கறாங்க. நான் இந்த நிலைக்கு உயர 35 வருஷமாச்சு. அதனால, பொறுமை அவசியம். மகிழ்ச்சியா வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும்னு நெனச்சிருந்தா, இந்த நிலைக்கு நான் வந்திருக்க முடியாது. சிந்தனைகளை சிதறவிடக்கூடாது. தங்க நகை தொழில்ல மட்டுமல்ல, பல்வேறு துறைகள்லயும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்குது. உலகத்துலேயே இந்தியாவுலதான் மனித வளமும் அதிகம். அதனால, ஒரு இலக்கை நிர்ணயிச்சு, கடினமான உழைச்சால், யாராக இருந்தாலும் வாழ்க்கையில சாதிக்கலாம். அதேமாதிரி, உடல் நலத்துலயும் கவனம் செலுத்தறது அவசியம். நான் என்னோட வாழ்நாள்ல 3-ல் ஒரு பங்கை டிராவல்ல கழிச்சிருக்கேன். மிகக் கவனமா ஆரோக்கியத்தைப் பராமரிக்கறதே இதுக்குக் காரணம்” என்றார்.

கின்னஸ் சாதனை!

துபாயில் 2015-ல் கே.சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் இணைந்து, 240 கிலோ தங்கத்தில், 5 கிலோமீட்டர் நீளமுள்ள தங்கச் சங்கிலியை உருவாக்கினர். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா, கோலாலம்பூர் பெட்ரோனாஸ் டவர், அபுதாபி மசூதி, பழமையான கார்கள் என பல்வேறு மாதிரிகளை வெள்ளி, தங்கத்தால் உருவாக்கியுள்ளனர்.

குவிந்த விருதுகள்!

மத்திய, மாநில அரசுகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் எமரால்டு நிறுவனத்துக்கும், அதன் தலைவர் கே.சீனிவாசனுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிக ஏற்றுமதி, நவீன டிசைன்கள், சிறந்த நகை உற்பத்தி, அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, சிறந்த தொழில்முனைவோர், மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் நகை தயாரிப்பு, பெரிய அளவிலான நகை வியாபாரம் என விருதுகள் குவிந்துள்ளன.

“வாழ்க்கையில் நிறைய விருதுகள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு விருதும், என்னை இன்னும் சிறப்பாகச் செயல்படத்தான் தூண்டுகிறது. அதேசமயம், தரமான, சிறந்த நகை என்று வாடிக்கையாளர்களிடம், மக்களிடம் உள்ள நம்பிக்கையைத்தான் எல்லாவற்றிலும் சிறந்த விருதாகப் பார்க்கிறேன். முன்பெல்லாம் இத்தாலிக்குச் சென்று இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றால், கொஞ்சம் அலட்சியத்துடன்தான் நடத்துவார்கள். இப்போது, அதே நாட்டுக்குச் சென்றால், மற்றவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, என்னை சந்தித்துப் பேசுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே, எனக்குக் கிடைத்த உண்மையான வெற்றி எனக் கருதுகிறேன்.

உலகின் தலைசிறந்த 10 பெரிய நகை தயாரிப்பு நிறுவனங்களில் எமரால்டும் ஒன்று என்பது பெருமையளிக்கிறது. அதேசமயம், இந்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டும், மாசற்ற தங்கம், தரமான நகைகள், எங்கும் கிடைக்காத டிசைன்கள் என்ற கொள்கையில் இன்னும் விடாப்பிடியாக இருந்து, மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே லட்சியம்” என்றார் உறுதியுடன்.

வியாபாரம்தான் முதல் மனைவி!

“என்னைப் பெண் பார்க்க வந்தபோது, `எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. வியாபாரம்தான் என்னோட முதல் மனைவி’  என்று கூறிவிட்டுத்தான் பேசவே தொடங்கினார்” என்றார் கே.சீனிவாசனின் மனைவியும், எமரால்டுநிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநருமான சக்தி சீனிவாசன். “கடின உழைப்பும், நேர்மையும்தான் அவரோட தாரக மந்திரம். சின்ன வயசுல வறுமையால ரொம்ப கஷ்டப்பட்டிருந்தாலும், ஒரு கொள்கையோட தொழில்ல முன்னேறத் துடிக்கிறார்னு தெரிஞ்ச உடனேயே, இவரைத் தான் கட்டிக்கனும்னு முடிவு செஞ்சேன். வட இந்தியாவிலேயும் தொழில் செய்யறதால, இந்தி தெரிஞ்ச, வியாபாரத்துல ஆர்வம் கொண்ட பொண்ணா இருக்கனும்னு கண்டிஷன் போட்டிருந்தார். அப்பவே எனக்கு இந்தி தெரிஞ்சிருந்தது. திருமணமாகி வந்தப்புறம், என்னோட முதல் கவனம், அவரோட அம்மாவைப் பாத்துக்கிறதுலதான் இருந்தது. அவங்களை

நான் பாட்டினுதான் கூப்பிடுவேன். எப்ப வருவாரு, எப்ப போவாருன்னே தெரியாது. அவருக்கு வீட்டுல நிம்மதி இருந்தா

தான், தொழில்ல முழு கவனமும் செலுத்த முடியும்னு புரிஞ்சிக்கிட்டு, அவரோட தேவைகளைக் குறிப்பறிந்து நிறைவேற்றுவேன். இண்டஸ்ட்ரி மாடர்னா மாறும்போது, கொஞ்சம் கொஞ்சமா நானும் தொழிலுக்கு வந்தேன்.

அவருக்கு ஒரு வேலையை எடுத்துட்டா, அதை முடிக்காம ஓய மாட்டார். ஒரு வார்த்தை சொல்லிட்டாருன்னா, அதை நிறைவேற்றனும்னு உறுதியா இருப்பாரு. எமரால்டு மொத்தமுமே அவரோட குடும்பம்தான். தொழிலாளர்கள் நலன்ங்கறது அவரோட ரத்தத்துலேயே ஊறியிருக்கு. எனக்கும், சிறந்த பெண் தொழில்முனைவோர்னு பட்டமெல்லாம் கொடுத்தாங்க. ஆனா, அதையெல்லாம்விட, அவரோட கனவை நனவாக்கனும்ங்கறதுதான் என்னோட லட்சியம். சின்ன வயசுலேயே, எங்க அப்பா-அம்மா, உனக்காகவும், நம்ம குடும்பத்துக்காகவும் மட்டும் பிரார்த்தனை செய்யாதே, வரப்போற கணவருக்காகவும் பிரார்த்தனை செய்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப்படியே செஞ்சேன். இந்த நேரத்துல அவங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன். இப்ப, என்னோட குடும்பத்துக்காக மட்டுமில்ல, ஒட்டுமொத்த எமரால்டு தொழிலாளர்களோட குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்யறேன்” என்றார் சக்தி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன்.

அப்பாதான் என்னோட ரோல் மாடல்…

எமரால்டு நிறுவனத்தின் அடுத்த தலைமுறை நிஷ்டாஸ்ரீ. பிளஸ் டூ வரை கோவை யுவ பாரதி பள்ளியில் பயின்ற இவர், பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு பிபிஏ முடித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் ஸ்பெயினில் `மாஸ்டர் இன் மார்க்கெட்டிங்’ படிக்கப் போகிறார். கடந்த சில மாதங்களாக எமரால்டு நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும் தொழிற் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். “நாம் செய்யற தொழிலை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு.

அதனால, இந்த நிறுவனத்தை நல்லாப் பாத்துக்கணும். நீங்களும் தொழிலுக்கு வரணும்னு, சின்ன வயசுல இருந்தே அப்பா சொல்லுவாரு. `இப்பத்திக்கு படிப்புல கவனம் செலுத்து, கல்லூரி முடிஞ்சதுக்கப்புறம் தொழிலுக்கு வா`னு சொல்லுவாரு. அதே மாதிரி, இப்ப இண்டஸ்ட்ரிக்கு வந்திருக்கேன். சின்ன வயசுல, அவரு எங்க கூட நிறைய நேரம் இருக்க மாட்டேங்கறாருனு ஏக்கம் இருக்கும். ஆனா, ஃபேக்டரிக்குப் போய் பார்த்த வாட்டிதான் தெரியுது, அவரு எவ்வளவு உழைச்சிருக்காருனு. வெளியில இருந்து பார்க்கும்போது, பெரிய ஃபேக்டரினு மட்டும்தான் தெரிஞ்சது. ஒவ்வொரு பிரிவா போய் பாத்தப்பதான், இதை செதுக்கியிருக்காருனு தெரிஞ்சது. அப்பாவோட உழைப்பைப் பார்த்தா பிரம்மிப்பா இருக்கு. எனக்கு அவருதான் ரோல் மாடல், அவரை மாதிரியே, தொழில்ல உயரணும். எமரால்டு நிறுவனத்தை உலகத்துலேயே முன்னணி நிறுவனமா மாத்தணும். அதுமட்டுமில்ல, ஒவ்வொரு இந்தியர் வாழ்க்கையிலும் எமரால்டு அங்கம் வகிக்கணும். எல்லோர் வீட்டிலயும் எமரால்டு நகை இருக்கணும். தரம்ங்கறது நாம கொடுக்கற பொருள்ல மட்டுமில்ல, எண்ணத்துலயும் இருக்கணும். யாரையும் ஏமாத்தாம, புண்படுத்தாம, கடினமா உழைச்சி, முன்னேறனும். அப்பா சொல்லிக்கொடுத்த இந்த விஷயங்களை, வாழ்நாள் முழுக்க மறக்காம கடைப்பிடிப்பேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் நிஷ்டாsரி

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.