Press "Enter" to skip to content

கணவன் மனைவி சச்சரவில் சிதறும் காமம்!9 நிமிட வாசிப்பு“பகல்ல தான் சண்டை, ராத்திரியில எல்லாம் சரியாப் போயிடும்” என்று சொல்லும் எத்தனையோ தம்பதிகள் இங்குண்…

“பகல்ல தான் சண்டை, ராத்திரியில எல்லாம் சரியாப் போயிடும்” என்று சொல்லும் எத்தனையோ தம்பதிகள் இங்குண்டு. “சண்டையும் சச்சரவும் அந்த கணத்தில் மட்டும்தான் மனதில் இருக்கும். கணவன், மனைவி அந்தரங்கத்தில் அதற்கு வேலையில்லை” என்றிருப்பவர்கள், ஊடல் தான் கூடலுக்கு வழிவகுக்கும் என்ற பார்முலாவைப் பின்பற்றுபவர்கள். சொல்லிவைத்தாற்போல, இதேபோன்ற அனுபவம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

மாறாக, கணவன் மனைவி இடையேயான தினசரிச் சச்சரவுகளால் செக்ஸ் ஆர்வம் குறைந்துபோகும் என்கின்றன சில ஆய்வுகள். பிரச்சினையின் தீவிரம் மற்றும் சம்பந்தப்பட்ட தம்பதியின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்து இவை மாறுபடும் என்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளாக, இந்திய கலாசாரத்தில் கணவன் மனைவி இடையே சமநிலை என்ற நிலைமை அமையப் பெறவில்லை. இப்போதும்கூட, பல வீடுகளில் பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதே நிலை. ஆணாதிக்க மனப்பான்மையு மிகுந்த ஒரு சமூகத்தில், தம்பதிகள் இடையே ஏற்படும் பிணக்குகளை எப்படித் தீர்க்க வேண்டுமென்பது குறித்த புரிதல் கண்டிப்பாக இருக்க முடியாது.

இன்று இந்த நிலை மாறிவருகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்றானபிறகு, வீட்டு வேலைகளைப் பகிர்வதில் கூட கணவன் மனைவி இடையே சண்டை உண்டாகிறது. குழந்தைகளைக் குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்புவது, சமையல் செய்வது தொடங்கி ரேஷன், கேஸ் பில், எலக்ட்ரிசிட்டி பில், கைபேசி ரீசார்ஜ், ஆதார் அட்டை வாங்குவது என்று பல வேலைகள் கணவன், மனைவி இடையே பகிரப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. இவற்றில் சில தினசரி அலுவல்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இவற்றைப் பகிர்வதில் முகச்சுளிப்பு உண்டாவதைத் தவிர்க்க முடியாது.

அலுவலகத்தில் இருந்து தாமதமாக வீடு திரும்புவது, சிலவற்றை மறந்துவிடுவது, அன்பு மற்றும் நேசத்துக்குரிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது போன்றவை தம்பதிகள் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, பணம் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்படும் மன வேறுபாடுகள் மிகப்பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கின்றன. சண்டைக்குப் பின் சமாதானம் என்பதனைச் செயல்படுத்த முடியாதபோது, அது தீராத தலைவலியாக மாறுகிறது.

ஒருவருக்கொருவர் எதிர்த்திசையை நோக்கிக் கொண்டிருக்கும்போது, எங்கிருந்து உடல் நெருக்கம் உருவாகுமா? வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி எல்லா மட்டங்களிலும் இதே நிலைதான். திருமணமான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது தாமதப்படுவதனால் இது நிகழும். நாற்பது வயதைத் தொடும்போது கணவன், மனைவி இருவருக்குமே பாதிக்கிணறைக் கடந்த விரக்தி ஏற்படும். இது எல்லாமே பெரும்பாலான தம்பதிகள் இடையே ஏற்படக்கூடியது என்பது மனநல நிபுணர்களின் வாதம்.

உடல் ரீதியான தாக்குதல் நடந்தால் தான், கணவன் மனைவி அந்தரங்கத்தில் விரிசல் விழும் என்றில்லை. பல நேரங்களில் வார்த்தைகளில் தடிக்கும் பிரச்சினைகள் கூட செக்ஸ் அதிருப்திக்கு வித்திடுகின்றன. இதுவே பெரிதாகி, கணவன் மனைவியரது நிரந்தரப் பிரிவுக்கும் காரணமாகின்றன.

தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செயல்பட வேண்டியது கட்டாயம். பல தம்பதிகளின் செக்ஸ் பிரச்சினைகளுக்கு, அவர்களது தினசரிச் சச்சரவுகளில் தீர்வு காணப்படாததும் ஒரு காரணமாக உள்ளது. இது ஒருவருக்கொருவர் விருப்பமின்மையை ஏற்படுத்தி, அதுவே வீட்டில் தொட்டில் கட்ட முடியாத நிலையையும் சிலரது வாழ்வில் ஏற்படுத்துகிறது.

2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் கணவன் மனைவியரது தினசரிச் சச்சரவுகள் செக்ஸ் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சைக்காலஜி துறை பேராசிரியர் சாரா ஹாலே இது பற்றி ஒரு ஆய்வை . சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டார், வயதான, திருமண வாழ்வில் நீண்ட அனுபவம் கொண்ட மத்திய வயதுத் தம்பதிகள் 127 பேரை இதற்கு உட்படுத்தினர். தினசரி வேலைகளில் இருந்து பண விஷயம் வரை பல்வேறு பிரச்சினைகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சண்டையைத் தோற்றுவிக்கும் விஷயங்களைப் பேசும்போது, சம்பந்தப்பட்ட கணவன் மனைவியின் 15 நிமிட உரையாடல் பதிவு செய்யப்பட்டது. ஒருவரையொருவர் காயப்படுத்தும் விதமாகப் பேசும் வார்த்தைகள், பிரச்சினைகளின் பின்னணி, பிரச்சினையைத் தவிர்க்கும் விதமாக இருவரில் ஒருவர் பின்வாங்குதல், பேச்சைத் திசைமாற்றுதல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

சச்சரவுகள் தொடரும்போது அது பற்றிப் பேசாமல் தவிர்ப்பதன் மூலம், குறிப்பிட்ட தம்பதியருக்கு இடையே பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் போனது கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், இளம் தம்பதியினர் சண்டைடும்போது அதனைத் தவிர்ப்பதற்குப் பதிலாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும்விதமாகப் பேசுவதும் இதில் தெளிவானது.

image

“வயது மட்டுமல்ல, திருமண பந்தத்தின் ஆயுள் காலமும் தம்பதிகளின் சண்டையைத் திசைமாற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது” என்கிறார் சாரா ஹாலே. வயதானவர்களில் புதிதாகத் திருமணம் செய்தவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்துள்ளார். கணவன் மனைவி இடையேயான நடத்தைகளைக் கவனித்தபோது, தேவைகளைத் திரும்பப் பெறுவது என்பது சண்டை சச்சரவுகள் தொடருமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, மனைவியின் விருப்பத்தை ஏற்று கணவன் விட்டுத்தரும்போது முந்தைய தேவைகள் விரிவாக்கம் பெறுகின்றன. சில நேரங்களில் இது தொடரும்போது ஜோடிகளில் யாராவது ஒருவரது கை மேலோங்கி, இதனால் ஏற்படும் மனக்குறைகள் தீர்க்கப்படாமல் உறவுகளில் விளைவை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் ஹாலே.

image

ஆதிக்கம் நிறைந்த மனைவி, அமைதியான கணவன் என்ற ஸ்டீரியோடைப் தாண்டியும், தேவைகளைத் திரும்பப் பெறும் குணம் குறித்து இவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டு ஒருபாலின ஈர்ப்பு கொண்ட ஜோடிகள் இடையேயும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்று விரும்புபவர் உறவில் ஆதிக்கம் மிகுந்தவர்களாக இருப்பதும், குறைவான தேவைகள் உடையவர் அந்த மாற்றங்களினால் பயன் பெறுபவராகவும் விட்டுக்கொடுப்பவராகவும் இருப்பதும் கண்டறியப்பட்டது” என்கிறார் ஹாலே.

எப்படிப்பட்ட ஜோடிகளாக இருந்தாலும், பிரச்சினையும் தீர்வும் ஒன்றாகத்தான் உள்ளது. பிரச்சினைகள் உண்டானால் அதனை உணர்வுப்பூர்வமாக கணவனும் மனைவியும் பேசும்போது, தீர்வு கிடைக்காவிடினும் தம்பதிகள் இடையே நெருக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உண்டு. இந்த அளவுகோலை உணர்ந்துகொண்டவர்கள் வீட்டில் பகலில் சத்தம் நிறைந்திருக்கும்; இரவில் சம்மோகனம் தவிர மற்றனைத்தும் அடங்கியிருக்கும்.

நன்றி: சயன்ஸ் டெய்லி

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »