Press "Enter" to skip to content

வரலாற்றில் இன்று: விண்ணில் கரைந்த வீராங்கனை!4 நிமிட வாசிப்பு“இந்த நட்சத்திரங்களையும் கேலக்ஸியையும் பார்க்கும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிய…

இன்று (மார்ச் 17) கல்பனா சாவ்லாவின் பிறந்த தினம்

ஆசிஃபா

“இந்த நட்சத்திரங்களையும் கேலக்ஸியையும் பார்க்கும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருந்து மட்டும் வரவில்லை, சூரியக் குடும்பத்தின் ஓர் அங்கம் என்று உணர்வீர்கள்” என்று சொன்ன கல்பனா சாவ்லாவின் 57ஆவது பிறந்தநாள் இன்று.

இந்தியாவில் பிறந்த ஒரு பெண் விண்வெளிக்குச் செல்வது அதுவே முதல்முறை. 16 ஜனவரி 2003 அன்று விண்வெளிக்குச் சென்ற STS-107 கொலம்பியா விண்கலத்தில் ஆறு பேருடன் இரண்டாவது முறையாக விண்வெளிக்குச் சென்றார் கல்பனா சாவ்லா. 16 நாட்கள் விண்வெளியில் இருக்கப் போவதாகத் திட்டமிடப்பட்டு புறப்பட்ட அது, பிப்ரவரி 1 அன்று, கீழே இறங்கிக் கொண்டிருக்கையில், பூமிக்கு வருவதற்கு 16 நிமிடங்கள் முன்பு வெடித்து, அனைவரும் உயிரிழந்தனர்.

கல்பனா, 1962, மார்ச் 17 அன்று ஹரியானாவில் கர்னல் என்னும் ஊரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தார். கர்னலில் உள்ள தாகூர் பால் நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பி.டெக் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டத்தை பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பெற்றார். அந்தக் கல்லூரியில் படித்த நான்கு மாணவிகளில் ஒருவர் கல்பனா என்பது குறிப்பிடத்தக்கது! அதன் பிறகு, அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.

கல்வி ஒரு புறமிருக்க, பல கலைகளையும் இவர் கற்றார். கராத்தே, நடனம், பேட்மிண்டன் போன்றவற்றைப் படித்ததோடு, இவருக்குக் கவிதை எழுதவும் தெரியும். பரதநாட்டியம், ஸ்கூபா என்று பல ஆர்வங்களைக் கொண்டவர் கல்பனா. 1991ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்ற கல்பனா, நாசாவிற்கு 1993ஆம் ஆண்டில் விண்ணுக்குச் செல்ல அனுப்பிய முதல் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது. 1995ஆம் ஆண்டில், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

கல்பனா சாவ்லா Congressional Special Medal of Honour, NASA Space Flight Medal, NASA Distinguished Service Medal என்று பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் இவரைக் கௌரவிக்கும் விதத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல கல்லூரிகள், தெருக்கள், கல்வி நிறுவனங்கள் இவர் பெயரால் அறியப்படுகின்றன. அது மட்டுமின்றி, இந்தியாவின் முதல் வானிலை செயற்கைக்கோளுக்கு ‘கல்பனா 1’ என்று பெயரிடப்பட்டது. இதோடு, நாசாவின் சூப்பர் கணிப்பொறி, குருக்ஷேத்ரத்தில் ஒரு பிளானட்டேரியம், மார்ஸ் கோளில் ஒரு குன்று, ஒரு ஆஸ்டீராய்டு ஆகியவற்றுக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விண்ணில் பறக்கும் விமானத்தால் கவரப்பட்டு, சிறு வயதில் பல விமானங்களை வரைந்துகொண்டிருந்த இந்தச் சிறுமி விண்ணிலேயே தனது அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தார். அந்த விண்ணிலேயே கரைந்தும்போனார்.

தன் கனவின் மீது நம்பிக்கையும் அதை நனவாக்குவதற்கான உழைப்பும் இருந்தால் எத்தகைய கனவும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் கல்பனாவின் பிறந்தநாளில் அவரது அபாரமான சாதனைப் போற்றி அவரை நினைவுகூர்வோம்!

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »