Press "Enter" to skip to content

வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #VelloreConstituency

சென்னை:

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். 

‘பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியுமா? தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம்  செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது.

தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், வழங்கப்படாதவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. வருமான வரித்துறை அறிக்கையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா நடந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். வேலூர் வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என வாதம் செய்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர்.

இந்நிலையில், மாலையில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #LokSabhaElections2019 #VelloreConstituency

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »