Press "Enter" to skip to content

தேர்தல் ஆணையத்துக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் கடிதம் மாதிரி வாக்கை நீக்க மறந்து போச்சு…

நெல்லை: நெல்லை, தென்காசி மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து நெல்லை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும்  வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்த அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு  காவல் துறை  பாதுகாப்பு போட்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும், 2ம் அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், மூன்றாவதாக மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விவிபேட்  இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டது.

ஆலங்குளம் தொகுதியில் மாயமான்குறிச்சி வாக்குச்சாவடியில் பூத் எண்.76ல் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளை க்ளியர் செய்யாமல், வாக்குப்பதிவு நடத்தப்பட்டதாக புகார் வந்தது. அதேநேரத்தில் விவிபேட் இயந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குப்பதிவு வாக்குகள் கட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கையின்போது இந்த விஷயம் கருத்தில் எடுத்துக்  கொள்ளப்படும். இது அங்கிருந்த அரசியல் கட்சிகளின் பூத் முகவர்களுக்கும் தெரியும். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அலுவலருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்தார். மாதிரி வாக்குப்பதிவை க்ளியர் செய்யாமல் வாக்குப்பதிவு நடத்தினால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »