Press "Enter" to skip to content

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: மதுரையில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில், பச்சைப்பட்டு உடுத்தி அழகர் நேற்று காலை மதுரை வைகையாற்றில் இறங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டம் நடந்தது. அழகர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அழகர்கோயிலில் குடி கொண்டுள்ள சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு, 17ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மதுரை அருகேயுள்ள மூன்றுமாவடியில் பக்தர்களிடம் எதிர்சேவை கொண்டார். இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்தார்.

அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆகியவற்றுடன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு வந்து தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அழகராக மதுரை வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு பச்சைப்பட்டு உடுத்தி ஆழ்வார்புரம் பகுதி வைகையாற்றில் 5.50 மணிக்கு இறங்கினார். அப்போதுலட்சக்கணக்கான பக்தர்கள், ‘கோவிந்தா… கோவிந்தா’ என கோஷம் எழுப்பினர். அங்கு அவரை சுவாமி வீரராகவப்பெருமாள் வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7.15 மணிக்கு ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். அழகரைப்போல வேடமிட்ட பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு அழகர், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். அங்கு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தசாவதாரம், பூப்பல்லக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழாவுக்காக 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.