Press "Enter" to skip to content

100 சதவீத இலக்கு கனவாகிறது தென்மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு குறைய காரணம் என்ன?

* விழிப்புணர்வுக்கு ஒதுக்கிய தொகை விரயமானது

நெல்லை : தேர்தல் ஆணையம் ஒரு மாத காலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் தென்மாவட்டங்களில் இம்முறை குறைந்தபட்சம் 75 சதவீத வாக்குப்பதிவை கூட எட்ட முடியவில்லை. வாக்குப்பதிவு மையங்களில் நடந்த பல்வேறு குழப்பங்களால் வாக்காளர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்ய முடியாமல் திரும்பினர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் இம்முறை 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2014ம் ஆண்டு பதிவான 73.7 சதவீதத்தையும் விட குறைவாகும். கடந்த மக்களவை தேர்தலை ஒப்பிடுகையில் இம்முறை தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்பட்டன.

தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு என்னும் கோஷத்தை முன்வைத்து கோடிக்கணக்கில் நிதியை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது. தென்மாவட்டங்களில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணிகள், தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள், கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள், மக்கள் கூடும் இடங்களில் ராட்சத பலூன்கள், பால் பாக்கெட்டுகள், பொது விநியோக திட்ட பொருட்களில் விழிப்புணர்வு வாசகம் என எத்தனையோ நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வளவு நடந்தாலும் நெல்லையில் 66.71 சதவீத வாக்குப்பதிவும், தென்காசியில் 70.98 சதவீத வாக்குப்பதிவும், தூத்துக்குடியில் 69.03 சதவீத வாக்குப்பதிவும், கன்னியாகுமரியில் மிக குறைவாக 62.32 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையமும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் காட்டிய அக்கறையை சிறிதளவு கூட வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கான வசதிகளில் காட்டவே இல்லை. குறிப்பாக பூத் சிலிப் வினியோகம் கூட பல இடங்களில் சம்பிரதாயமாகவே மேற்கொள்ளப்பட்டது.

தென்மாவட்டங்களின் பல வாக்குசாவடிகளில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்த வாக்காளர்கள் பாகம் எண், வரிசை எண் தெரியாமல் திண்டாடினர். சில வாக்காளர்கள் அதற்காக வெளியே அனுப்பப்பட்டனர். ஓட்டுப்போட வாக்குசாவடிக்கு வந்த பின்னர் சிலர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென திருப்பி அனுப்பப்பட்டனர்.
தென்மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நகர்ப்புறங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் குறித்த நடத்திய விழிப்புணர்வுகளை கிராமப்புறங்களில் அதிகளவில் நடத்தவில்லை. கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு விழிப்புணர்வு நடத்தியதாக அதிகாரிகள் கணக்கு எழுதிக் கொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடிக்கடி மக்கர் செய்தது பலரையும் எரிச்சல் அடைய வைத்தது.

சில இடங்களில் ஆர்வத்தோடு ஓட்டுபோட வந்த வேட்பாளர்கள் இயந்திரம் பழுது காரணமாக வெளியில், வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. கிராமப்புறங்களில் சில ஓட்டு சாவடிகள் 2 கி.மீ தொலைவில் உள்ளன. அங்கு வாக்காளர்கள் செல்லும்போது மின்னணு இயந்திரம் பழுதாகியிருந்தால், திரும்பும் வாக்காளர்கள் மீண்டும் ஓட்டுபோட செல்லவில்லை.

சமீபகாலமாக கிராமப்புறங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் பண வினியோகமும் ஓட்டுக்கு வேட்டு வைப்பதாகவே உள்ளது. அரசியல் கட்சிகள் பண விநியோகம் செய்யும் போது புறக்கணிக்கும் பகுதி மக்கள், யார் ஜெயித்தால் என்ன என்கிற அலட்சியத்தோடு வாக்குப்பதிவை புறக்கணித்த சம்பவங்களும் நடந்துள்ளன. 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு  வெளியூர்களில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு வர உரிய போக்குவரத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்து கொடுத்த மாதிரி தெரியவில்லை.

தேர்தல் நாளன்று சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டபேருந்துகள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதன் காரணமாக பெருநகரங்களில் இருந்து பல வாக்காளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திண்டாடினர். 100 சதவீத வாக்குப்பதிவு என்கிற பெரும் இலக்கை அடைய பல கோடி ரூபாயை செலவிட்ட தேர்தல் ஆணையம் அதில் குறைந்தபட்சமாக 80 சதவீத வாக்குப்பதிவையாவது எட்டியிருக்க வேண்டும். கடைசி நேர குளறுபடிகளால் தேர்தல் ஆணையத்தின் இலக்கு தோல்வியடைந்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »