Press "Enter" to skip to content

ஆனைகட்டி அருகே இன்று அதிகாலை வீட்டை உடைத்து யானை அட்டகாசம்

கோவை: ஆனைகட்டி அருகே வனத்திலிருந்து வெளியேறிய யானை இன்று அதிகாலை வீட்டை உடைத்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 பேர் வேறு ஒரு அறையில் பதுங்கி உயிர் தப்பினர். கோவை ஆனைகட்டி சேம்புக்கரையை சேர்ந்தவர் பெருமாள்(58). கூலி தொழிலாளி. இவர் தன் குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை யானை பெருமாள் வீட்டின் முன் இருந்த மதில் சுவர், ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஆகியவற்றை உடைத்து தள்ளியது. பிறகு ஓட்டு வீட்டு கூரை மற்றும் முன் பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றது.

அப்போது சப்தம் கேட்டு வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக எழுந்து பார்த்தனர். வெளியே யானை நிற்பதையறிந்து வேறு ஒரு அறையில் பதுங்கினர். இந்த நிலையில் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி யானையை அங்கிருந்து விரட்டினர். பிறகு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தாமதமாக வந்தனர். ஆனால் அதற்குள் யானை வனத்திற்குள் சென்று மறைந்தது.

இது குறித்து பெருமாளின் மகன் மதன் கூறுகையில், ஆனைகட்டி வனத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மக்னா ஒற்றை யானை அடிக்கடி உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கிறது. இதே போல் இன்று காலை வந்த யானை உணவு தேடி எங்கள் வீட்டை உடைத்துள்ளது. நாங்கள் வேறு ஒரு அறையில் பதுங்கி உயிர் தப்பினோம். யானையை அடர் வனத்திற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »