Press "Enter" to skip to content

தமிழக தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப புல் வளர்க்க புதிய தொழில்நுட்பம்: கால்நடை துறை அறிமுகம்

சென்னை: தமிழக தட்ப, வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாடுகள் வைத்துள்ள விவசாயிகள், நூதன முறையில் புல் வளர்க்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட கால்நடை துறை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மாட்டு பண்ணையை வைத்திருப்பவர்களுக்கு மாடுகளுக்கு தினமும் புல் கொடுத்து வளர்ப்பது மற்றும் விலையுயர்ந்த தீவனத்தை கொடுப்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. அதிக மாடுகளை வைத்திருப்பவர்கள் அதிக அளவு புல்களை வளர்க்க அதிக இடமும், அதிக அளவு தண்ணீர் மற்றும் இதர இடுபொருட்களும் தேவைப்படுகிறது. அது மட்டுமன்றி தட்ப, வெட்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது எண்ணிக்கையில் மாடுகள் குறைந்து வந்தாலும், நகர் மற்றும் புறநகர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் புல் வளர்க்க போதுமான இடம் இருப்பதில்லை. இந்த பிரச்சனையை தீர்க்க, புதிய தொழில் நுட்பத்தை திருவள்ளூர் கால்நடைத் துறையினர் அறிமுகபடுத்தி உள்ளனர்.

தொழில்நுட்பம் என்றால் ஏதோ பெரிய ‘‘ராக்கெட் சயின்ஸ்’’ என்று நினைத்து விடாதீர்கள். மிகவும் எளிதான யோசனைதான் அது. நாம் முளை கட்டிய பயிரை சாப்பிடுகிறோம் அல்லவா? அதே முறையை கால்நடைகளுக்கும் விரிவுபடுத்தி விட்டார்கள். புற்களோடு  தீவனத்தையும் சேர்த்து நூதன முறையில் கால்நடைகளுக்கு உணவிட இந்த முறையை அறிமுகபடுத்தி உள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட தானியம் மற்றும் பயிறு விதைகளை அவர்கள் கொடுக்கும் பிரத்யேகமான டிரேயில் போட வேண்டும். அந்த டிரேயை அறையில் வைத்து வளர்க்க வேண்டும். தண்ணீரை குறிபிட்ட இடைவெளியில் தெளித்து கொண்டு இருக்க வேண்டும்.அவர்கள் கொடுக்கும் அறையில் வெப்பநிலை, ஈரபதம் போன்றவை தக்கவைக்கப்படுகிறது. நீர் மற்றும் தட்ப வெப்ப நிலை இருப்பதால் விதை முளைவிட்டு ஆறே நாட்களில் 12 செமீ உயரம் புல் வளர்ந்து விடுகிறது. வளர்ந்த புல்லை டிரேயிலிருந்து அப்படியே எடுத்து மாட்டிற்கு உணவாக கொடுக்கலாம். டிரேயில் உள்ள பயிரில் செடியும் வேரும் மட்டும் இருப்பதால் கால்நடைகள் அப்படியே முழுவதுமாக சாப்பிட்டு விடும். இதுபோல் டிரேயை சுழற்சி முறையில் உபயோகப்படுத்தினால் தினமும் புல் கிடைத்து கொண்டே இருக்கும். அடுக்கடுக்காக டிரேக்களில் வளர்ப்பதன் மூலம் மிக குறுகிய இடத்தில்  பல மாடுகளுக்கு தேவையான புல்களை வளர்க்கலாம்.

இவ்வாறு பெறப்படும் முளை கட்டிய பயிரிலிருந்து கிடைக்கும் சக்தி, மார்கெட்டில் கிடைக்கும் பிற தீவன பொருட்களுக்கு இணையானது என்கின்றனர் கால்நடை துறையினர். இதுகுறித்து கால்நடை துறை மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘விதை முளை விடும்போது அதன் என்சைம் செயலாக்கம் அதிரிக்கிறது. இந்த என்சைம், புரோட்டீன்களை எளிதில் செரிக்கக்கூடிய அமினோ அமிலங்களாகவும், கார்போ ஹைடிரேட்டை எளிய சர்க்கரை பொருட்களாகவும், கொழுப்பை, எளிய கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றி கொடுக்கிறது. அதாவது இந்த உணவை செரிக்கப்பட்ட உணவு எனலாம். இவ்வாறு முளை கட்டும்போது கால்நடைக்கு தேவையான வைட்டமின் ஏ, இ, நார்சத்து, மற்றும் போலிக் அமிலம் போன்றவற்றின் அளவும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முளைவிடும்போது எதிர்ப்பு சத்து காரணியாக உள்ள பைட்டேசின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள் உறுதி செய்கிறது. தமிழகத்தில் இயற்கையே விதையை முளைத்து வளர்க்க நல்ல  தட்ப வெப்ப நிலையை கொடுக்கிறது. விதை தவிர எந்த பெரிய முதலீடும் இல்லாமல் இதை தமிழக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பரிசோதனை செய்து பார்க்கலாம்’’ என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.