Press "Enter" to skip to content

ஐந்தாண்டுகளில் அதிகரித்தது 25,713 வாக்காளர்கள்: கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரத்து 713 வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதின் வாயிலாக வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்குசாவடிகளுக்கு சென்றபோது அவர்களது பெயர் வாக்குசாவடியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடலோர பகுதிகளில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்ற பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் இந்தநிலை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் பூத் சிலிப்புகள் கைவசம் இருந்தபோதிலும் அவர்களுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வாக்காளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகள் வருடம்தோறும் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறும்போது வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும், அவ்வாறு இல்லாமல் கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஒன்றும் செய்ய வாய்ப்பு இல்லை. அத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் அடையாள அட்டை இருந்தாலும் வாக்களிக்க இயலாது என்று தெரிவித்தார்.

ஆனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மக்கள்தொகைக்கு ஏற்ப பெருமளவு வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இயல்பாகவே சேர்க்கப்படாமல் அல்லது அவ்வாறு சேர்க்கப்பட்டும் பட்டியலில் இருந்து பெருமளவில் நீக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 67 ஆயிரத்து 796 பேர் இருந்தனர். ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கடந்து கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரத்து 713 வாக்காளர்கள் மட்டுமே ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து அதிகரித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 24 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தக்க 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களாக தகுதி பெறுகின்றனர். அந்த வகையில் ஐந்தாண்டுகள் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடத்திற்கு இறப்பு விகிதம் என்பது மாதம் 700 முதல் 900 வரை உள்ளது என்று சுகாதாரத்துறை கூறுகிறது. அந்தவகையில் ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் பேர் வரை இறந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் நீக்கப்பட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் போக சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்களேனும் பட்டியலில் ஐந்தாண்டுகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 25 ஆயிரம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட மொத்த எண்ணிக்கையில் இருந்து தெரியவருகிறது.

சட்டமன்ற தொகுதிவாரியாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தவிர இதர ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து மொத்தம் 35,377 வாக்காளர்கள் நடப்பு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நீக்கப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் 10035 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இதர 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது அதிகாரிகளின் குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அத்துடன் கடந்த மூன்றாண்டுகளாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய வாக்காளர்களும் 72 ஆயிரம் பேர் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் வைக்கப்பட்டதும், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 5 தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு வாக்குரிமையை தாருங்கள் என்று வீதிக்கு வந்த அவர்கள் போராட்டம் நடத்தியதும், கலெக்டரை சூழ்ந்துகொண்டு கேள்விகள் எழுப்பியதும் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு அதிகாரிகளே முட்டுக்கட்டையிட்டது தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 35,377 வாக்காளர்களுக்கு பதிலாக வாக்காளர் பெயர் சேர்ப்பு என்ற பெயரில் புதிய 35 ஆயிரம் இளம் வாக்காளர்களை சேர்த்து கணக்கு சமன் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் எண்ணிக்கை உயராமல் அப்படியே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தலில் வாக்குசாவடிகள் என்பது முக்கிய அம்சம் ஆகும். நகர பகுதிகளில் ஒரு வாக்குசாவடிக்கு அதிகபட்சம் 1400 வாக்காளர்கள் வரையும், கிராமப்பகுதியில் ஒரு வாக்குசாவடிக்கு 1200 பேரும் இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக வாக்காளர்களை சேர்க்கும்போது சேருகின்ற வாக்காளர்களை கொண்டு புதிய வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஐந்தாண்டுகளில் உருவாகின்ற புதிய வாக்காளர்களுக்காக மாவட்டத்தில் 100 வாக்குசாவடிகளுக்கு மேல் புதியதாக உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு வாக்குசாவடிகளுக்கு இடம் தேர்வு, வரைபடம் தயாரிப்பு, நிர்வாக ரீதியாக எண்கள் ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் வாக்குசாவடி எண்களுக்கு ஏற்ப பிரித்து தயாரிப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. கூடவே அதற்கேற்ற வகையில் மின்னணு இயந்திரங்கள் பெறுதல், அதற்கேற்ப இடவசதிகளை ஏற்படுத்துதல் என்று அது சார்ந்த பல்வேறு பணிகளும் நடக்க வேண்டியுள்ளது. இந்த பணிகளை தவிர்க்க வேண்டுமெனில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகாரிக்காமல் பார்த்துக்கொண்டால் போதும் என்ற நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். வாக்குசாவடிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் ஏற்கனவே இருக்கின்ற வாக்காளர்களை நீக்கிவிட்டு புதிய வாக்காளர்களை அதற்கு ஏற்ப சேர்த்துவிட்டால் திருத்தப்பணிகளை நிறைவு செய்துவிட்டது போன்று அதிகாரிகள் கணக்கு காண்பிக்கின்ற போக்கு இத்தகைய குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அது இந்த தேர்தலில் வாக்காளர்கள் மூலம் வெடித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் கடலோர கிராமங்களை மையமாக வைத்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு கடலோர பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகம் ஆகும். இங்கு புதிய வாக்குசாவடிகளை உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு நீக்கப்பட்ட வாக்காளர்களில் கடலோர கிராமங்கள் உட்பட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது அரசியல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு விடம் புகார் அளித்துள்ளனர். அவரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். படித்தவர்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் இருந்தும், வாக்குபதிவு சதவீதம் குறைவதற்கு அதிகாரிகளின் இந்த தில்லுமுல்லு நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே வரும் தேர்தல்களிலும் குழப்பங்கள் நடைபெறுவதை தடுக்க முயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.