ஈவிஎம் எந்திர விவகாரம்: புகார் அளிப்பவர்களை அச்சுறுத்துகிறதா தேர்தல் விதி?- ஒரு பார்வை

திருவனந்தபுரத்தில் நேற்று ஈவிஎம் எந்திரத்தில் கோளாறு என்று வாக்குச்சாவடியில் எபின் பாபு என்பவர் தன் வாக்கைப் பதிவு செய்த போது வாக்கைச் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டில் இவர் அளித்த சின்னத்துக்குப் பதிலாக வேறொரு சின்னத்தில் வாக்குப்பதிவாகியிருப்பதாக புகார் அளித்தார். இதனையடுத்து சோதனை வாக்குப்பதிவு செய்த தேர்தல் அதிகாரி இவர் கூறுவது போல் இல்லை, ஆகவே பொய் புகார் என்று கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்தது நடந்துள்ளது.

இது ஏதோ அரிதாக நிகழ்ந்த நிகழ்வல்ல, பல்வேறு இடங்களில் இத்தகைய புகார்கள் எழுப்பப்பட்டன, ஆனால் புகார் எழுப்புபவர்களை மிரட்டும் விதமாக சோதனையில் அவ்வாறு தவறாகப் பதிவாகவில்லை என்று நிரூபணமானால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குறைந்தது 6 மாதகாலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட விதிமுறை வழிசெய்துள்ளது.

அஸாமிய எழுத்தாளர் ஹரேகிருஷ்ணா தேகா என்பவர் உள்ளூர் ஊடகம் ஒன்றில் இது குறித்து புகார் தெரிவித்த போது, “நான் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க அந்த பொத்தானை அழுத்திய போது ஒப்புகைச்சீட்டு எந்திரம் வேறொரு வேட்பாளருக்கு வாக்களித்ததாகக் காட்டியது.  நான் அதனை கேள்வி எழுப்பி வாக்குச்சாவடி அதிகாரியிடம் கொண்டு சென்றேன். அவர் கூறினார் ரூ.2 கட்டினால் புகாரை ஏற்கலாம் என்றார்.. ஆனால் கூடவே, இது பொய்புகாரானால் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் பரவாயில்லையா என்றார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, நான் எப்படி இதை நிரூபிப்பது?” என்று தி ஒயர் ஊடகத்தில் அவர் கேட்டுள்ளார்.

இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் சாஹு கூறிய போது தேகா இதனை நிரூபிக்க வேண்டும் என்றார். ”வாக்குச்சாவடி அதிகாரி ஒரு படிவம் ஒன்றை அளிப்பார். அதில் தான் கூறுவது உண்மை என்று வாக்காளர் உறுதி அளிக்க வேண்டும். தவறாகிப் போனால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஊடகம் ஒன்றிற்கு சாஹு தெரிவித்தார்.  “அம்மாதிரி உறுதி அளித்தால் சோதனை வாக்க்குப்பதிவு நடத்தப்படும் இந்தப் படிவம் 49 எம்.ஏ ஆகும்.”என்றார்.

ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது மீரட்டில் வாக்காளர் ஒருவர் தான் பகுஜன் சமாஜுக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக ஒப்புகைச்சீட்டு காட்டியதை தன் செல்போனில் படம் பிடித்தார். உடனடியாக அந்த எந்திரம் மாற்றப்பட்டது. அப்போது பாஜக அல்லாத பிற கட்சிகள் எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று வாதிட்டதாக ஆங்கில நாளேடு எழுதியது. ஏப்ரல் 23ம் தேதி திருவனந்தபுரத்தில்  ஒரு வாக்காளர் காங்கிரஸுக்கு வாக்களித்த போது ஒப்புகைச் சீட்டில் தாமரைச் சின்னம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில்தான் இன்னொரு வாக்காளர் திருவனந்தபுரத்தில் புகார் எழுப்ப பொய் புகார் என்று சோதனையில் தெரியவர அவர் மீது வழக்குப் போடப்பட்டது.

2013ம் ஆண்டு விதிகளின் படி இந்தியத் தண்டனைச் சட்டம் 177-ன் படி ‘தவறான தகவல்’ அளித்தது நிரூபிக்கப்பட்டால் 6 மாதகால சிறைத்தண்டனையுடன் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் சோதனை வாக்குப்பதிவின் போது எந்திரம் சரியாக வேலை செய்கிறது. ஆகவே ஒரு முறை செய்த தவறை ஈவிம் அடுத்த முறை செய்யுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்கிறார் எழுத்தாளர் தேகா.

ஆகவே ஈவிஎம் பற்றிய புகார்களை குற்றம் என்பதிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

வாக்காளர்கள் துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதற்காகத்தான் இந்த விதி உள்ளது என்று தேர்தல் ஆணையம் கருதுவது சரியென்றாலும் உண்மையான புகார்கள் எவை, பொய் புகார்கள் அல்லது துஷ்பிரயோகம் எவை என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Source: The Hindu

Author Image
murugan