பசுவதை செய்கிறது பாஜக: தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் மத்திய அமைச்சர் புலம்பல்

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார் பூர் தொகுதியில் 2014-ல் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யான வர் விஜய் சாம்ப்லா. பின்னர் இவர் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தார்.

பிரதமர் மோடி தலைமை யிலான அமைச்சரவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராக இவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில், தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு அளிக்கப் படும் சலுகைகள் போய் சேர வில்லை என்று விஜய் சாம்ப்லா என்று அண்மையில் குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஹோஷியார்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக மேலிடத்திடம் அனுமதிச்சீட்டு கேட்டு இருந்தார். ஆனால் இவருக்கு பதி லாக பக்வாரா தொகுதி எம்எல்ஏ சோம் பிரகாஷுக்கு பாஜக அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளது.

இதனால் விரக்தியடைந்த மத்திய அமைச்சர் விஜய் சாம்ப்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் (காவலாளி) என்ற அடைமொழியை நீக்கிவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அதிருப்தியை அவர் வெளியிட்டு வருகிறார். நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நான் மிகவும் சோகத்தில் இருக்கிறேன், பாரதிய ஜனதா கட்சி பசுவதை செய்துள்ளது” என குற்றம்சாட்டினார். மற்றொரு ட்விட்டர் பதிவில் “என் மீது ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் (பாஜக) சொல்ல வேண்டும். என் மீது என்ன தவறு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். எனக்கு ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. என் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. என் நடத்தையைப் பற்றி யாரும் கைநீட்டி பேசவே முடியாது.

எனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறேன். என்னுடைய தொகுதியில் விமானநிலையம் வர காரணமாக இருந்துள்ளேன். சிறப்பான சாலை வசதிகள் அமைத்துள்ளேன். பல்வேறு புதிய ரயில்கள் இந்தத் தொகுதிக்கு விடப்பட்டுள்ளன. இதையெல்லாம் தவறு என்று நீங்கள் சொன்னால், இந்தத் தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று எனது வருங்கால சந்ததிகளுக்குச் சொல்வேன்” என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவுகள் பாஜகவின் தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.

57 வயதாகும் விஜய் சாம்ப்லா, வளைகுடா நாடுகளில் குழாய் பழுதுநீக்கும் பணியில் இருந்தவர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்து, ஜலந்தர் அருகிலுள்ள சோபி கிராம பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு 2014-ல் முதல் முறையாக எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்ச ராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

Author Image
murugan