Press "Enter" to skip to content

3 முறை அறிவித்தும் தோல்விகண்ட திட்டம்… நடக்காத வேலைக்கு ரூ.1,020 கோடி நிதியா?

மதுரை: மதுரை மாநகர் 100 வார்டுகளுக்கும் ஒரு நாள் குடிநீர் தேவை 300 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி). ஆனால் வைகை அணை, காவிரி ஆறு மற்றும் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து தற்போது கிடைக்கும் 175 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. 125 மில்லியன் லிட்டர் பற்றாக்குறையால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. மாநகர் உள்பட மாவட்டம் முழுவதும் 35 லட்சம் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே போகிறது. இதற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு 158 கி.மீ. தூரம் குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை 2017 ஜூலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து அரசின் சாதனை பட்டியலில் வெளியிடப்பட்டது. மதுரை மாநகருக்கும், மாவட்டத்திற்கும் குடிநீருக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று மதுரை மாவட்ட அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். இந்த திட்டம் ஏற்கனவே 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தி சாத்தியமில்லை என நிராகரிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 3வது முறையாக அந்த திட்டத்தை கையில் எடுத்து “அம்ரூத்” சிறப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் ரூ.1020 கோடிக்கு அனுமதி வாங்கியது. ஆனால் லோயர் கேம்பில் பணியை தொடங்க முடியவில்லை. ஓராண்டுக்கு முன் அடிக்கல் நாட்ட அதிகாரிகள் லோயர்கேம்ப் சென்று விவசாயிகள் முற்றுகையால் திரும்பி வந்தனர். அதன் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அரசு அறிவித்து 2 ஆண்டுகளாகியும், அந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் 3வது முறையாக தோல்வி கண்டுள்ளது. அந்த திட்டத்துக்கு அதிகாரிகள் தற்போது மீண்டும் மல்லுக்கட்டுகிறார்கள். சாத்தியமாகுமா என்பது பெரிய கேள்வி குறியாக எழுந்துள்ளது.

மூத்த பொறியாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் கூறும்போது, “ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி சாத்தியமில்லை என நிராகரிக்கப்பட்ட திட்டத்தை எடப்பாடி அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கும் ரூ. 1020 கோடி மூலம் வைகை அணையை தூர்வாரினால் அங்கு கூடுதல் நீரை சேமிக்க வாய்ப்புள்ளது. அங்கிருந்து கூடுதல் நீரை குழாய் மூலம் கொண்டு வர முடியும். மதுரை வண்டியூர், மாடக்குளம், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை தூர்வாரி தண்ணீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம். இதுபோன்ற சாத்தியமான திட்டங்களை கையில் எடுக்க தவறுகிறார்கள். இதே நிலை நீடித்தால் குடிநீர் திண்டாட்டம் தீராது” என்றனர்.

அறிவித்த திட்டம் இதற்குதான் பயன்பட்டது

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அமைச்சர்கள் பிரசாரம் செய்யும் இடங்களில் “தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் அலைகிறோம், ஓட்டு மட்டும் கேட்கிறீர்கள்” என்று பெண்கள் குமுறலை கொட்டினர். அதற்கு அமைச்சர்கள், “பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேறப்போகிறது, தாகம் தீர்ந்துவிடும்” என்று மழுப்பலாக பதில் கூறினர். “கானல் நீரை காட்டுவது போல் பெரியாறு கூட்டுகுடிநீர் என்று 2 ஆண்டாக ஏமாற்றுகிறார்கள்” என்பது மக்கள் விமர்சனமாக உள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »