Press "Enter" to skip to content

இன்று உலக குடும்ப தினம் : திசை மாறி திரிந்தாலும் கூடு… ஒரு கூடு…

மனித வாழ்க்கையின் அஸ்திவாரமே குடும்பம் தான். பழங்காலத்தில் கூட்டுக்குடும்ப முறையில் வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, சித்தப்பா என தடுக்கி விழுந்தால் கூட குடும்ப உறுப்பினர் மேலதான் விழ வேண்டும். அப்படி ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கை சொர்க்கமாய் இருந்து வந்தது. காலங்கள் மாறின. தொழில் முறை, தனிமையை விரும்புதல் உள்ளிட்ட காரணங்களால் புதுமணத்தம்பதி தனிக்குடித்தனம் போவது சகஜமாகி விட்டது.

தாத்தா மடியில் உட்கார்ந்து அறட்டை அடிப்பது, பாட்டி ஊட்ட நிலாச்சோறு சாப்பிட்டு கதை கேட்பது உள்ளிட்ட எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களை, இன்றைய கால குழந்தைகள் இழந்து நிற்கின்றன. அதனால்தான் கோபம், கட்டுப்பாடின்மை, பொறுமையின்மை என ஒருவிதமான மனநோய்களுக்கு ஆட்பட்டது போல குழந்தைகள் வாழ்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க… வேலை நிமித்தமாக வெளிநாடில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டிலேயே கிராமங்களை விட்டு விட்டு நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள், அனைவரையும் ஒரு நாளில் சந்திக்க வைத்து மனம் விட்டு பேச வைக்கும் ஒரு நாள்தான் உலக குடும்ப தினம். அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. எப்போது ஆரம்பித்தது இந்த தினம் என்று பார்க்கலாமா? ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 1993ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதியை உலக குடும்ப தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு தினங்கள் எத்தனையோ வரலாம். ஆனால், குடும்ப தினம் கொண்டாடும் சூழல் ஆரோக்கியமானதா? என்று யோசித்து பார்க்கும்போது, பிரிந்து கிடக்கும் உறவுகள் ஒரு நாளாவது கூடித் திளைக்கட்டுமே… அதற்காகவாவது ஒரு நாள் இருப்பது சந்தோஷம்தானே…! இதில் இன்னொரு விஷயத்தை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் ஒரு விடுமுறை பொழுது எப்படி கழிகிறது. அப்பா வாட்ஸ் அப்பே கதியென கிடப்பார். அம்மா யாரிடமாவது தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பார்.
பிள்ளைகள் பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பார்கள். வீடு அமைதியாகி விட்டது. பணி நேரத்திலும் கூட வீட்டிற்கு வந்தவுடன் உறங்க செல்வதை வழக்கமாகி கொண்டு விட்டோம். சந்தோஷமாக கூடி பேசுவது என்பது தனிக்குடித்தன வாழ்க்கையில் வெகுவாக குறைந்து விட்டது. சுற்றுலா சென்றாலும் அதை யாரும் அனுபவிப்பதில்லை. செல்பி எடுப்பது, குரூப் போட்டோ எடுப்பது என ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

குடும்பத்தோடு அமர்ந்து பேசுவது தற்போது வெகுவாக குறைந்து விட்டது. இந்த தினம் ஏன் என துவக்கத்தில் விவாதமாக்கப்பட்டது. இப்போது அது அவசியம்தான் என எண்ணத்தோன்றுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தனிக்குடித்தனம் இருந்தாலும் வாரம் ஒருமுறை உறவுகளை சந்தித்து பேசுங்கள். தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகளை கொஞ்ச விடுங்கள். அவர்களை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். குடும்பத்துடன் கூடி களிப்பதை விட இந்த உலகத்தில் சொர்க்கமான தருணங்கள் எதுவுமே இல்லை.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »