Press "Enter" to skip to content

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் முறையீடு

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விடுமுறைக்கால நீதிமன்றத்தில் ரத்து வழக்குகளை விசாரிக்க முடியாது என்றும் முன்பிணை கேட்டு மனுதாக்கல் செய்தால் நாளையே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் உயர்நீதிநீதி மன்றம் கிளை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கமலின் சர்ச்சை பேச்சு:

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார். கமலின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கமல் மீது தொடரப்பட்ட வழக்குகள்:

இந்த விவகாரத்தால் கமல்ஹாசனுக்கு எதிராக அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்பேரில், கமல்ஹாசன் மீது கரூர் மாவட்டக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கமலின் மீது, வந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் வழக்கு தொடர்ந்தார். கமல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகக்கோரி அறிவுறுத்தியுள்ளது.  இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக பிரச்சாரம் மேற்கொள்ளாத கமல்ஹாசன், இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள மதுரை வந்துள்ளார்.

உயர்நீதிநீதி மன்றம் கிளையில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு:

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கமல்ஹாசன் மீது வேண்டும் என்றே அரசியல் உள்நோக்கத்தோடு அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள கமல்ஹாசனை காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இவர் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு அவசர கால சிறப்பு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, அவசர கால நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டுமே எடுத்து விசாரிக்க முடியும். எனவே, வழக்குகளை ரத்து செய்யகோரிய மனு மீதான விசாரணைக்கு ஏற்று கொள்ளமுடியாது என தெரிவித்தார். இந்த வழக்கில் முன்பிணை கோரி மனுதாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »