Press "Enter" to skip to content

எல்லாமே தலைகீழ்.. இப்படியும் ஒரு தேர்தல் அவசியம்தானா? சலிக்க வைக்கும் ‘ஜனநாயக திருவிழா’

ALLOW NOTIFICATIONS
 

oi-Mathivanan Maran
|

சென்னை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை சலித்துப் போகச் செய்யும் அளவுக்கு தேர்தல்களை ‘அரண்மனை விளையாட்டாக’ நடத்திக் கொண்டிருக்கிறது தலைமை தேர்தல் ஆணையம்.

ஜனநாயகத் திருநாடு… ஜனநாயகத் திருவிழா.. என்றெல்லாம் பெருமிதம் பேசிக் கொண்டு தேர்தலை கொண்டாடுகிறோம் நாம். ஆனால் அத்தனை பெருமிதங்களுக்கும் மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது நமது தேர்தல் திருவிழா கூத்துகள். இந்த முறைதான் வரலாறு காணாத சர்ச்சைகளை வாரிக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் என்றாலே பணமழைதான்.. அதுவும் வங்கிகளே திவாலாகிப் போகும் அளவுக்கு பணப்பட்டுவாடா கொடி கட்டிப் பறக்கிறது.. அங்கிங்கெனாதபடி அத்தனை அரசியல் கட்சிகளும் பணத்தை வாரி இறைக்கின்றன.

உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 709 பள்ளிகள்.. விரைவில் மூட தமிழக அரசு அதிரடி முடிவு

ஆளும் கட்சி மீது கரிசனை

இதை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த முடியாதா? எதிர்க்கட்சியினர் வீடுகள், குடோன்களில் குடைந்து குடைந்து மூட்டை மூட்டையாக அள்ளிச்செல்லும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை ‘அந்த’ ஆளும் கட்சி தரப்பை மட்டும் கண்டும் காணாமல் கடந்து போய்விடுவது எந்த வகையில் ‘ஜனநாயகம்’ என்பதுதான் புரியவில்லை.

எத்தனை நாடகங்கள்

அதுவும் பிரதமரின் உலங்கூர்தியில் சோதனை நடத்தி தமது நேர்மையை தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் நிரூபிக்குமாம்.. இன்னொரு பக்கம் அந்த அதிகாரியை பணியிடைநீக்கம் செய்து தன்னுடைய அதிகாரத் துஷ்பிரயோகத்தை அரசு வெளிப்படுத்துமாமா? எத்தனை முரண் பாருங்கள்!

விசித்திரமான உத்தரவு

இதற்கு முந்தைய தேர்தல்களிலும் வன்முறைகள், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் என எல்லாமும் நடந்திருக்கிறது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே முடிக்கும் விந்தையான உத்தரவுகள் இப்போதுதான் பிறப்பிக்கப்படுகின்றன.

ராஜேந்திர பாலாஜிகளுக்கு க்ரீன் சிக்னல்

தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியடிகளை ‘சுட்டு’ ‘சுட்டு’ விளையாடும் விஷமிகளை கண்டிக்காதவர்கள்.. தேசத்தந்தையை சுட்டுக் கொன்ற கொலைகாரனை தீவிரவாதி என்றால் வரிந்து கட்டிக் கொண்டு வாய்ப்பூட்டுக்கு தயாராவார்களாம்.. கொலைகாரனை தீவிரவாதி என சொன்ன ஒற்றை காரணத்துக்காக நாக்கை அறுப்பேன் என்கிற ராஜேந்திர பாலாஜிகளின் கூச்சல் மட்டும் தேர்தல் ஆணையத்தின் காதில் விழுந்துவிடாதாம். தேசத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பல முறை ஒரே அணியில் திரண்டு போய் வரம்பு மீறி பேசும் பிரதமர் வகையறாக்கள் மீது புகார் கொடுத்தாலும் பலனில்லை.. ‘க்ளீன் சிட்’ கொடுத்து நீங்க என்ன வேண்டுமானாலும் பேசுங்க மகாராஜா என வெண்சாமரம் வீசுகிற அதிர்ச்சியைக் கொடுத்தது இ்த தேர்தல்தான்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான வாக்காளர்களின் சந்தேகங்களை இந்த தேர்தல் ஆணையம் தீர்த்து வைத்தபாடில்லை.. அப்படியான நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.. அந்த அறைகளுக்குள் அதிகாரிகள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சென்றும் வருகிறார்கள் .. இதை சுட்டிக்காட்டினால் ‘ஒரு கண்துட்டைப்பு இடமாற்ற நாடகம் அரங்கேறுகிறது..அதுவும் கோர்ட் தலையிட்ட பிறகே.. மொத்தத்தில் வரலாறு காணாத வகையில் பல்வேறு சர்ச்சைகளுடன் இந்த முறை தேர்தல் கோலாகலமாக முடிவை நெருங்கி வருகிறது.

இது ‘ஆரோக்கியமான’ ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் பேராபத்து என்பதை யார் உணர்த்துவது? யார் உணருவது?


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.