Press "Enter" to skip to content

திருவாரூர் அருகே முள்ளியாற்றின் கரையோரம் 3,000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மீட்பு!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு அருகே 3,000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி அருகே முள்ளியாற்றின் கரையோரம் ஒரு மர்ம மூட்டை கிடந்துள்ளது. அப்பகுதி மாணவர்கள் அங்கு விளையாட சென்ற போது அந்த மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு மூட்டை நிறைய ஆதார் அட்டைகள் இருந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி துறையினருக்கு உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். வட்டாட்சி தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதார் அட்டைகளை பார்வையிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி கிராமத்தினரின் ஆதார் அட்டைகள் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் ஆதார் அட்டைகளை யார் வாங்கி சென்றது என விசாரணை நடத்தப்பட்டபோது, ஆதார் அட்டைகளே அப்பகுதி மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர். ஆதார் அட்டையின் கட்டாயம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிறையில் இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை நகலை வாங்கி தற்போது வரை பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆதார் அட்டைகளை மூட்டையில் கட்டி கரையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »