Press "Enter" to skip to content

கோடை மழை பெய்த போதும் அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை: விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்தாலும் அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், பென்னாகரம், உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தின் பிரதான நீராதாரம் காவிரி நதியாகும். தர்மபுரியில் ஒரு ஆண்டிற்கு சராசரி மழையளவு 760 மி.மீ ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் 926 ஏரிகள், 5,301 கிணறுகள், 2056 ஆள்துளை கிணறுகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ராமாக்காள், செட்டிக்கரை, ரெட்ரி, நார்த்தம்பட்டி, இலளிகம், பாப்பாரப்பட்டி, பைசுஅள்ளி, சோகத்தூர் உள்பட 73 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரி, குளங்களும் உள்ளன.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக, மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது. இருந்த போதும் எந்த ஏரிக்கும், அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை. இதனால் அனைத்து நீர்நிலைகளும் வறண்டே காணப்படுகிறது. தற்போது வாணியாறு அணையில் 22 அடி, தொப்பையாறு அணையில் 10 அடி, நாகவாதி அணையில் 4 அடி, கேசரி குலஅள்ளி அணையில் 7அடி, வரட்டாறு அணையில் 9 அடி, ஈச்சம்பாடி அணையில் 16 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. நடப்பாண்டில் பெய்து வரும் கோடை மழையால், எந்த அணைக்கும் நீர்வரத்து இல்லை. மேலும், தும்பலஅள்ளி அணை, சின்னாறு அணையில் நீர்வரத்து இன்றி வறண்டுவிட்டது. நடப்பாண்டிலும் ஏரிகள் உள்பட அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »