Press "Enter" to skip to content

மூணாறில் கொம்பன் யானைகளின் அட்டூழியம் தொடரும் அவலம்

மூணாறு: மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் கொம்பன் யானைகளின் அட்டூழியம் தொடர்கிறது. இதுவரை 29 பேர் யானைகள் தாக்கியதில் பலியாகியுள்ளனர். யானைகளை கட்டுப்படுத்தாமல் வனத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகினறனர். மூணாறு பகுதியில் காடுகளில் இருந்து இறங்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் யானைகள் இறங்குவதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னக்கானல் 301 ஆதிவாசி காலனியில் மாற்றுத்திறனாளியான ஆதிவாசி நபரை காட்டுயானைகள் தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது. மூணாறில் கொலைகார யானைகளாக கருதப்படும் சக்க கொம்பன் மற்றும் அறிக்கொம்பன் என்ற இரண்டு யானைகள் கிருஷ்ணன் என்ற ஆதிவாசி நபரை கொடூரமாக கொன்றது. 2010ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை 29 பேர் தேவிகுளம் வனத்துறையின் கீழ் உள்ள இடங்களில் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் சின்னக்கானல் பகுதியில் மட்டும் 4 பேர் யானைகள் தாக்கி இறந்தனர். 2018 மே 24ம் தேதி மூலத்தாரை பகுதியில் ஏல தோட்ட கண்காணிப்பாளர் வேலு (55), ஜூலை 4ம் தேதி மூத்தம்மா காலனியில் தங்கச்சன் (55), ஜூலை 11ம் தேதி ராஜமலை பகுதியில் எஸ்டேட் கண்காணிப்பாளர் குமார் (40), செப்டம்பர் 20ம் தேதி மூலத்துறையில் எஸ்டேட் தொழிலாளியான முத்தையா (65) போன்றவர்கள் கட்டு யானைகளின் கோர தாண்டவத்தில் கொல்லப்பட்டவர்கள். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டுயானைகளின் இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இந்த விஷயத்தில் வன வகுப்பு அலட்சியப்போக்கு காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு தரக்கூடிய அறிக்கொம்பன் என்று அறியப்படுகின்ற யானையை மயக்க மருந்து பயன்படுத்தி பிடிக்க 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தலைமை வனக் காவலர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த கொம்பனை கேரள மாநிலம் மலையாட்டூர் யானை முகாமிற்கு மற்ற வேண்டும் என்பது வனவகுப்பின் தீர்மானமாக இருந்தது. மேலும் கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தலைமையில் 2018 செப்டம்பர் மாதம் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்களும், முக்கிய அதிகாரிகளும் யானைகளின் தொந்தரவை எடுத்து கூறினர். இதனால் இந்த யானையை பிடிக்க தலைமை வனத்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு பிறப்பித்து பல மாதங்கள் கடந்த நிலையில் அறிக்கொம்பன் என்ற யானையை பிடிக்க வனத்துறை அதிகரிகள் முன்வரவில்லை.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மயக்க மருந்துகள் பயன்படுத்தாமல் கும்கி யானைகளை வரவழைத்து அறிகொம்பனை விரைவில் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர். ஆனால் இந்த யானை மூலம் பல உயிர்கள் பலியாகி கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். காட்டுயானைகள் பாதுகாப்பு முகாம் மூணாறில் வருமா என்பதும் தற்போது கனவாக மாறியுள்ளது. சின்னக்கானல் பகுதியில் 301 ஆதிவாசி காலனியில் விளக்கு பகுதி மற்றும் யானையிறங்கள் பகுதிகளில் 600 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் பாதுகாப்பு முகாம் துவங்க திட்டம் தயாராக உள்ளது. மேலும் ஜி.பி.எஸ் உபகரணங்கள் மூலம் இதற்குரிய மேலாய்வு எடுக்கப்படும் என்று வனத்துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. யானைகள் மூலம் தொடரும் உயிர்பலியில் இருந்து அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Source: Dinakaran