Press "Enter" to skip to content

அண்ணா பல்கலை. செமிஸ்டர் தேர்வில் 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை

சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமிஸ்டர் தேர்வில் 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற செமிஸ்டர் தேர்வின் முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வித பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள் உட்பட 514 பொறியியல் கல்லூரிகளில் வெறும் 10 கல்லூரிகள் மட்டுமே 80%த்திற்கும் அதிகமாக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

அண்ணா பல்கலை. 3 வளாகங்களிலும் தேர்ச்சி விகிதம் 80%திற்கும் கீழ் குறைந்துள்ளது. 84 கல்லூரிகள் மட்டுமே 50 முதல் 80% வரை தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. 0-5% தேர்ச்சி விகிதத்தை 27 கல்லூரிகள் பெற்றுள்ளன. 41 கல்லூரிகள் 5-10 % வரை தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. 10 முதல் 20 % வரையிலான தேர்ச்சி விகிதத்தை 118 கல்லூரிகள் பெற்றுள்ளன. கடந்தாண்டுகளில் பருவ தேர்ச்சி விகிதங்களை விட 2018 டிசம்பர் மாத தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

இந்நிலையில்  அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமிஸ்டர் தேர்வில் 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 61 பொறியியல் கல்லூரிகளில் 10% குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் இனிமேலாவது பொறியியல் கல்வி முறைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆய்வு செய்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், அப்படி செய்யாவிட்டால் தமிழக மாணவர்களின் கல்வி தரம் குறைந்து வேலைவாய்ப்புகளை எட்டிப்பிடிப்பதும் சிரமம் ஆகி விடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »