Press "Enter" to skip to content

மூட்டை மூட்டையாக ஆற்றில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு அருகே எல்லை நாகலடி கோட்டகம் கிராமத்தில் முல்லையாறு ஓடுகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. நேற்று மாலை இந்த ஆற்றில் 3 மூட்டைகள் கிடந்தது. மூட்டைகளை அந்த வழியாக சென்றவர்கள் பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றில் ஆதார் அட்டைகள் இருந்தன. அவற்றில் இருந்த அத்தனை அட்டைகளும் ஒரிஜினல். மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியவை. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு தங்களுக்குரிய ஆதார் அட்டைகளை தேடினர். இதில் பலர் தங்களது ஆதார் அட்டைகளை தேடி எடுத்துச்சென்றனர். இன்று காலையும் ஏராளமானோர் திரண்டு ஆதார் அட்டைகளை தேடி வருகின்றனர். இதனால் ஆறு முழுவதும் அட்டைகள் சிதறிக்கிடக்கின்றன. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி விஏஓ அப்பாஸ் மந்திரி இன்று சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதார் அட்டைகள் தான் இங்கு மூட்டைகளில் கட்டி வீசப்பட்டுள்ளது. பல பணிகளுக்கு ஆதார் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் அட்டைகள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அட்டைகளை மக்களிடம் சேர்க்காமல் ஆற்றில் வீசியது பொறுப்பற்ற செயல். ஆற்றில் வீசிய அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் வீசப்பட்டுள்ள அட்டைகளை சேகரித்து உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்றார். தாசில்தார் ராஜன்பாபுவிடம் கேட்ட போது, தபால் துறையினர் தான் அட்டைகளை விநியோகிப்பார்கள். அட்டை விநியோகத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆற்றில் ஆதார் அட்டைகள் வீசப்பட்டது குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்புவோம் என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.