Press "Enter" to skip to content

கோடை மழை ஏமாற்றி விட்டது குமரியில் தென்மேற்கு பருவ மழை கை கொடுக்குமா?: ஏக்கத்தில் மக்கள்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் செழித்து வந்தது. ேமலும் கோடையிலும் மழை பொழிந்து அக்னி வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றி வந்தது. தற்போது பருவ மாற்றங்களால் மழை பொழிவு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் பொதுவாக நிலவும் குளுகுளு தட்பவெட்பம் தற்போது வெகுவாக குறைந்து வெப்ப காற்று வீசும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழகத்தில் கோடை ெதாடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்தது. அதுபோல தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் சதத்தை தாண்டி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டு வெப்பம் விளாசி வந்தது. குமரி மாவட்டத்திலும் 100 டிகிரியை எட்டி கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. தற்போதும் அக்னி அனல் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெளியில் தலைகாட்ட முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்த நிலையில் குமரி உட்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடை மழை கொட்டியது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் சில நாட்கள் மழை பெய்து வந்தது. வெயிலில் இருந்து ஓரளவு விடை கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுபோல பானி புயல் மூலம் தமிழக கடலோர மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென புயல் திசைமாறியதால் மழைக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது இப்படியிருக்க கடந்த 4ம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கி உள்ளது. இது 26 நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி தொடங்கி குறைந்தபட்சம் 21 நாட்கள் முதல் அதிகபட்சமாக 28 நாட்கள் வரை கத்தரி வெயில் இருக்கும். சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் நட்சத்திர மண்டல பகுதிக்கு பூமி வருவது வெப்பம் மிகுந்த காலம். இந்தியாவில் இந்த காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் காலம் என அழைக்கப்படுகிறது. கத்திரி வெயில் காலத்தின் தொடக்கத்தில் முதல் 7 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்று 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு வெயில் படிப்படியாக குறையும். கத்தரி வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கத்தரி வெயில் நேரத்தில் குமரியில் கோடை மழை பெய்து குளிர்வித்தது. அதுபோல இந்த ஆண்டும் மழை பெய்து மக்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் குமரியில் கோடை மழை தலைகாட்டிவிட்டு தற்போது ஏமாற்றி விட்டது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பெய்த கோடை மழை, கிழக்கு மாவட்ட பகுதிகளில் இல்லை. இந்த நிலையில் 2019ம் ஆண்டில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடங்கும் என தனியார் வானிலை மையம் அறிவித்துள்ளது.

குமரி மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் ஆனால் இம்முறை தாமதமாக தொடங்குகிறது. கடந்த ஆண்டு முன்கூட்டியே மே 30ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்தியாவில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும். இயல்புக்கு மிக அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதேநேரம் இயல்பான மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பும், இயல்புக்கு குறைவாக மழை பெய்ய 55 சதவீதம் வாய்ப்பும், வறட்சி நிலவ 15 சதவீதம் வாய்ப்பும் இருக்கிறது. தென்னிந்திய பகுதிகளை பொறுத்தவரை நீண்டகால சராசரியில் 95 சதவீதம், அதாவது 716 மிமி மழை பெய்யலாம். குறிப்பாக கேரளம் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் மழை ஓரளவு நன்றாக பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தனியார் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் குமரியிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என மக்கள் நம்புகின்றனர். தற்போது அடிக்கும் அனல் வெப்பத்தால் நீர்நிலைகள் பல வறண்டு விட்டன. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொழிந்து மக்களின் மனதையும், குமரி மண்ணையும் குளிர்விக்குமா? வருண பகவான் மனம் இரங்கட்டும்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »