Press "Enter" to skip to content

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, ஆறு, குளங்களில் குவியும் பறவைகள்

* இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
* வேட்டையை தடுக்கவும் வலியுறுத்தல்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு அரிய வகை பறவையினங்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தவண்ணம் உள்ளன. இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரலாறு காணாத கோடை வெப்பம் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குளம் குட்டைகள் அனைத்தும் வற்றிக்கிடக்கின்றன.

ஆயினும் கடலை ஒட்டிய கெடிலமாறு, தென்பெண்ணையாறு, பரவனாறு பகுதிகளிலும் உப்பனாறு மற்றும் உப்பங்கழிகளிலும் ஆற்று நீர் வற்றாமல் உள்ளது. மேலும் முகத்துவார பகுதிகளில் புன்னை மரக் காடுகள், தாழை செடிகள், கருவேலம் மரங்கள் நிறைந்து பறவைகள்  சரணாலயங்களாகவும் காட்சி அளிக்கின்றன.  இதுபோல் பிச்சாவரம் சதுப்பு நில காடுகளிலும் மிதமான தட்பவெட்ப நிலை காணப்படுகிறது.

 இதன் காரணமாக உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பறவைகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு வந்துள்ளன. கடலூர் தேவனாம்பட்டினம், கங்கனாங்குப்பம், நாணமேடு, சிதம்பரம் பிச்சாவரம், தியாகவல்லி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுப்பு நிலக்காடுகளில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் தங்கியுள்ளன.

இதுபோல் வீராணம் ஏரி, பெருமாள் ஏரி மற்றும் ஆற்றங்கரை படுகைகளில் பறவை கூட்டங்கள் வந்து சேர்ந்துள்ளன. குறிப்பாக செங்கால் நாரைகள், விதவிதமான கொக்கு இனங்கள், நத்தை குத்தி பறவை, நாரைகள், நீர்காகங்கள் போன்ற அரியவகை பறவையினங்கள் கடலூர் மாவட்டத்தின் விருந்தினர்களாக நீர் நிலைகளில் முகாமிட்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பறவைகள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர் கெடிலம் ஆற்றில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான நத்தை குத்தி பறவைகள் வந்திறங்கி உள்ளன. இங்கு அவைகள் நத்தைகள், நண்டுகள், சிறு மீன்களை ருசி பார்த்து வருகின்றன. கடலூர் அண்ணா பாலத்தின் வழியாக செல்பவர்கள் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து ஆறு முழுக்க நிறைந்து கிடக்கும் பறவை கூட்டத்தை பார்த்து மகிழ்வுடன் செல்கின்றனர். பறவை விருந்தினர்களின் வருகை பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள பறவைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பறவை ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெளிநாடு, வெளிமாநில பறவைகள் அதிகம் வரத்துவங்கி உள்ளது. இங்கு பறவைகளுக்கு தேவையான சூழ்நிலை இருப்பதால் வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தி பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும். இவைகள் இயற்கையின் கொடை. சமூகத்திற்கு பல வகைகளில் பறவைகள் இடமாற்றம் பேருதவியாக இருக்கிறது. இந்நிலையில் நீர் நிலைகளில் இருக்கும் பறவைகளை பலர் வேட்டையாடி வருகின்றனர். இதனை முழுமையாக தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »