Press "Enter" to skip to content

கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு: திருச்சியில் கமலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 7 பேர் கைது

திருச்சி: இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்பையை எரிக்க முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நூதுராம் கோட்சே என்று கூறினார். அவரது சர்ச்சை பேச்சுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில், கோட்டை சரக காவல் துறை உதவி கமி‌ஷனர் சந்திரசேகர் தலைமையில் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அக்கட்சி நிர்வாகிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் காவல்துறைக்கும், இந்து மகா சபா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »