Press "Enter" to skip to content

குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார் பறிமுதல்… மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்களை பறிமுதல் செய்து ஆணையர் நடவடிக்கை எடுத்தார். வேலூர் மாநகராட்சியில் 5.10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் விதமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பொன்னையாற்று தண்ணீர், பாலாற்று தண்ணீர் என பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை, 5 நாட்களுக்கு ஒரு முறை என்று குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மாநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சுகின்றனர். இதனால் அனைத்து பகுதிமக்களுக்கும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை சைதாப்பேட்டை, தோ.பா.சாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டாரில் குடிநீர் உறிஞ்சிய 5க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மின்மோட்டார் பயன்படுத்தினால் ₹13ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து அதேபகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

Source: Dinakaran