Press "Enter" to skip to content

குடிநீர் திட்டத்திற்காக குழாய், பாலம் பணிகள் விறுவிறுப்பு… நெல்லையில் ஆனித்தேரோட்டத்திற்கு முன் பணிகளை முடிக்க திட்டம்

நெல்லை: நெல்லையில் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்கள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை வரும் ஆனித்தேரோட்டத்திற்கு முன் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.185 கோடியில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே தொடங்கி ஆர்ச் வரை 2 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் கடந்த 9ம்தேதி தொடங்கியது. இப்பணிக்காக தென்காசி செல்லும்பேருந்துகள் பைபாஸ் ரோடு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி சாலை வழியாக நேற்று முதல் திருப்பி விடப்பட்டுள்ளன. இருப்பினும் கண்டியபேரி சாலை குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதனை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பேட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல் செல்லும்பேருந்துகள், வாகனங்கள் நெல்லையப்பர் கோயில் சன்னதி, சந்தி பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. சந்திப்பிள்ளையார் கோயிலில் இருந்து காட்சி மண்டபம் வரையுள்ள சாலை மிகவும் குறுகலானது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் கூட வருவதற்கு காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும் அந்த இடத்தில் போக்குவரத்து காவலர் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். ஆனித்தேரோட்ட திருவிழாவுக்கு முன் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். கல்லணை பள்ளி அருகே உள்ள 2 பழைய பாலங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. இப்பகுதியில் புதிய பாலம் கட்டப்படுகிறது.

பயணிகள் ஏமாற்றம்

குடிநீர் திட்ட பணிகளுக்காக தென்காசி, செங்கோட்டை மார்க்கத்தில் செல்லும்பேருந்துகள் கண்டியப்பேரி, பழைய பேட்டை சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் நெல்லை சந்திப்பு, டவுன் பகுதிகளில் இருந்து தென்காசி செல்பவர்கள் வண்ணார்பேட்டை அல்லது பழையபேட்டையில் இருந்து பஸ் ஏற வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சந்திப்பு அண்ணாசிலை அருகே அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால் விவரம் தெரியாத பயணிகள் அந்த வழியாகபேருந்துகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Source: Dinakaran