Press "Enter" to skip to content

23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் – முக ஸ்டாலின்

23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் என அரவக்குறிச்சியில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார்.

அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட தடாகோவில், வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், தென்னிலை, பரமத்தி, சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மோடியின் எடுபிடியாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வருகிற 19-ந் தேதி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். ஆகவே இந்த ஆட்சி கவிழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டது. மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மோடிக்கு முடிவு கட்டப்படுவதோடு, எடப்பாடி ஆட்சியும் தானாகவே கவிழ்ந்துவிடும் என்பது நிச்சயமாகிவிட்டது.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று மேற்கொள்கிற பிரசாரங்களில் எல்லாம், எனது ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என தொடர்ந்து பேசி வருகிறார். ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அது தானாகவே கவிழப்போவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 இடைத்தேர்தலிலும், ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

சபாநாயகர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் திட்டமிட்டு சதி செய்து, 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்து விடலாம் என ஒரு அறிவிப்பு கொடுத்தனர். அது கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்தில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என நான் ஒரு அறிவிப்பு அனுப்பினேன். இது அரசியல் ராஜதந்திரம். ஏனெனில் கலைஞரின் மகன் நான். அவரது ராஜதந்திரத்தில் 5 சதவீதமாவது எனக்கிருக்காதா? இந்த நிலையில் தான் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் தடை போட்டது.

சர்வாதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆட்சி செயல்படலாம். மத்தியில் மோடி இருந்தாலாவது ஆட்சியை காப்பாற்றுவார். ஆனால் அவரே வீட்டுக்கு செல்வது உறுதி. மேலும் தற்போது நீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை என்பதால் அப்பீலுக்கும் செல்ல முடியாது. எனவே மே 23-ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

எல்லா துறைகளையும் சேர்த்து கண்காணிப்பது தான் முதல்-அமைச்சரின் பொறுப்பு. இதே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கருணாநிதி, பக்தவச்சலம் உள்ளிட்டோர் முதல்-அமைச்சராக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, அனைத்து துறைகளையும் கண்காணித்தனர். அனைத்து துறை கோப்புகளும் முதல்-அமைச்சரின் பார்வைக்கு வரும்.

முக்கியமாக சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கக்கூடிய காவல்துறை, முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் தான் இருக்கும். மற்ற துறைகளையெல்லாம் அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியை பார்த்தீர்களேயானால், அவர் காவல்துறையை கையில் வைத்து கொண்டு, அதையும் தாண்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இப்படி பல முக்கியமான துறைகளை தானே வைத்து கொண்டார். ஏனெனில், எதில் அதிகம் கொள்ளையடிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நடந்தது.

ஆகவே இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த அயோக்கியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால், அதற்கு உதய சூரியனுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.